சென்னை தேனாம்பேட்டை காவல்நிலைய பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி அதிகாலை தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவல்நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டுச் சென்றனர்.
இதனால், ஏற்பட்ட தீயை காவல்துறையினர் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த, சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தது. மேலும், மூன்று தனிப்படைகள் அமைத்தும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கண்ணகி நகரில் வினோத், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரை நேற்று நள்ளிரவில் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் பெட்ரோல் குண்டு வீச வந்தவர்கள் என்றும், ஒருவர் அதற்கு உடந்தையாக இருந்தவர் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து தென் சென்னை காவல் இணை ஆணையர் அன்பு கூறுகையில்,"மணிகண்டன் என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வந்தனர். போலீசாரை மிரட்டவே இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. போலீசாரை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை" என்றார்.