சென்னையில் படு ஜோராக நடக்கும் கள்ளத்துப்பாக்கி பிசினஸ்: முக்கிய கட்சி பிரமுகர்கள் கைது!

சென்னையில் கள்ளத் துப்பாக்கி வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் செயல்படும், ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு (ஓ.சி.ஐ.யு.) என்ற தனிப்படை பிரிவு, தமிழகம் முழுவதும் கண்காணித்து ரவுடிகள் மற்றும் முக்கியமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வருகிறது.

ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீசார், கடந்த மாதம் தஞ்சையில் வழக்கறிஞர் ஒருவரை துப்பாக்கியுடன் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த குமார் என்பவரும், அவரது கூட்டாளிகளும் கள்ளதுப்பாக்கி விற்பனை செய்யும் ஏஜெண்டுகளாக செயல்படுவதாகவும், அவர்களிடம் இருந்து துப்பாக்கியை வாங்கியதாகவும் அந்த வழக்கறிஞர் கூறினார்.

அவர் சொன்ன தகவலின் அடிப்படையில், துப்பாக்கி விற்கும் ஏஜெண்டு குமாரை போலீசார் தேடினார்கள். அவர் வேலூர் மாவட்டம் ஏலகிரி மலையில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. அவரையும், அவரது கூட்டாளிகளையும் கூண்டோடு பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் வியூகம் ஒன்றை வகுத்தனர்.

அதன்படி போலீஸ்காரர் ஒருவரை துப்பாக்கி வாங்குவோர் போன்று நடிக்க வைத்து குமாரை சந்திப்பதற்கு அனுப்பி வைத்தனர். குறிப்பிட்ட அந்த போலீஸ்காரர், ஏலகிரி மலைக்கு சென்று துப்பாக்கி ஏஜெண்டு குமாரை சந்தித்து பேசினார். தனது பெயர் சந்தோஷ் என்றும், ஆந்திராவில் இருந்து வருவதாகவும் நவீனரக துப்பாக்கி ஒன்று வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால், குமார் அவரை உடனடியாக நம்பவில்லை. ஒரு வாரம் கழித்து வருமாறு அனுப்பி விட்டார்.

அதன்படி, ஒரு வாரம் கழித்து, ஏலகிரி மலையில் மீண்டும் குமாரை அந்த மாறுவேட போலீஸ்காரர் சந்தித்தார். அப்போது குமார் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு நேற்றுமுன்தினம்( செவ்வாய்க்கிழமை) இரவு வரும்படி கூறினார். இதையடுத்து, ஹோட்டலில் வைத்து கள்ளத்துப்பாக்கி விற்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார், சென்னை நகர போலீசாரின் உதவியை கேட்டனர்.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் இதற்காக ஒரு தனிப்படையை அமைத்தார். கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பரவேஷ் குமார் ஆகியோர் மேற்பார்வையில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஓ.சி.ஐ.யு. பிரிவுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டது.

திட்டமிட்டப்படி துப்பாக்கி வாங்குவதற்காக வேடமிட்ட போலீஸ்காரர் முதலில் நேற்றுமுன்தினம் இரவு, வாலாஜா சாலையில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கி ஏஜெண்டு குமாரை சந்தித்தார். குமார் அந்த போலீஸ்காரரை ஹோட்டலில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அந்த அறையில் மேலும் 3 இருந்தனர். அவர்கள் நவீன ரக துப்பாக்கி ஒன்றை மாறுவேட போலீஸ்காரரிடம் காட்டினார்கள். அந்த துப்பாக்கியின் விலை ரூ.5 லட்சம் என்றும், பணத்தோடு வந்தால் துப்பாக்கியை தருகிறோம் என்றும் அவர்கள் கூறினார்கள். பணம் ஏற்பாடு செய்து வருவதாக மாறுவேட போலீஸ்காரர், ஹோட்டலை விட்டு வெளியே வந்தார். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் காத்திருந்த தனிப்படை போலீசாரை அழைத்துக் கொண்டு மீண்டும் அந்த ஹோட்டல் அறைக்கு சென்றார்.

அந்த ஹோட்டலை சுற்றிவளைத்த போலீசார், அறையில் இருந்த குமாரையும், அவரது கூட்டாளிகள் சென்னை அண்ணாநகரை சேர்ந்த முருகன், மதுராந்தகத்தை சேர்ந்த பிரகாஷ், சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த கோபிநாத் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கள்ளத்துப்பாக்கி ஒன்றையும், 7 தோட்டாக்கள் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, கைதான 4 பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான முருகனும், கோபிநாத்தும் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் என தெரியவந்தது. குறிப்பாக, முருகன் முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் முன்னாள் வட்ட செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கள்ளதுப்பாக்கிகளை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி வந்து சென்னையில் அதிக விலைக்கு விற்கும் வியாபாரத்தை இவர்கள் செய்து வந்ததாக தெரிகிறது.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை வக்கீல் ஒருவர் மூலமாக அர்ஜூன் என்பவரிடம் இருந்து வாங்கியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அர்ஜூனிடம் இருந்து ரூ.3.5 லட்சத்துக்கு அந்த துப்பாக்கியை வாங்கியதாகவும் ரூ.1.5 லட்சம் லாபத்தோடு ரூ.5 லட்சத்துக்கு துப்பாக்கியை விற்க திட்டமிட்டு விலை பேசியதும் கண்டறியப்பட்டது.

துப்பாக்கியின் உரிமையாளரான அர்ஜூன் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எத்தனை கள்ளத்துப்பாக்கிகள் விற்கப்பட்டது என்றும் விசாரணை நடக்கிறது.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி 9 எம்.எம். பிஸ்டல் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதுபோன்ற துப்பாக்கிகளை பெரும்பாலும் போலீசார் தான் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 4 பேரும் தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close