தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் இடம் அருகே சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றக் கூறியதால், அக்கட்சி நிர்வாகிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் பிரம்மாண்டமாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்டோரின் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேனர்களை காவல்துறையினர் அகற்ற கூறியதால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதனை அகற்ற வேண்டுமெனக் கூறியுள்ளனர். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பேனர்களை அகற்ற வேண்டுமென காவல்துறையினரும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், பேனர்கள் அனைத்தும் கடந்த 5 நாள்களாக அதே இடத்தில் இருப்பதாகக் கூறும் கட்சி நிர்வாகிகள், திடீரென போலீசார் அதனை அகற்றக் கூறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் தான் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற கட்சியினரும் மாநாடுக்காக இதேபோன்று பேனர்கள் வைத்த போது காவல்துறையினர் தரப்பில் எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறும் கட்சி தொண்டர்கள், தாங்கள் பேனர் அமைக்கும் போது மட்டும் இவ்வாறு செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பேனர்களை காவல்துறையினர் சேதப்படுத்துவதாகவும் நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“