செப்டம்பர் மாதம் முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் அண்மையில் நடந்தது. இதில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கு கொண்டார். சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சாலை விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குற்றங்களின் பேரில், 9,500 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கடுமையான நடவடிக்கைகளால் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், விதிமீறல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும் என்று நம்புகிறோம்.
சாலை விதிமீறல்களை குறைக்கும் முயற்சியாக, வருகிற செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இருக்க வேண்டும் என்றார். இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட உத்தரவில், அரசு ஆணையின் படி செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும். தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.