குடியரசு துணைத் தலைவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், ’பாஜகவிலிருந்து விலகிவிட்டேன். இனி நான் எந்தக் கட்சியிலும் இல்லை' என்று அறிவித்தபடி, தனக்கான கடமைகளை உறுதியுடன் மேற்கொள்வதோடு, ஆளுநர் மாளிகையை இனிவரும் காலங்களில் அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தமாட்டார் என்றும் நம்புவதாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற பணிகளில் பழுத்த அனுபவம் பெற்று, இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள வெங்கய்ய நாயுடு, சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் எழுதிய ‘Those Eventful Days’ என்ற புத்தகத்தை வெளியிட்டு - உரையாற்றி, அது இன்றைய செய்தித் தாள்களில் வெளியாகி இருக்கிறது.
'அரசியல் சட்டப்படி ஆளுநர் நடக்க வேண்டும்', என்றும், 'தமிழகத்திற்கு நிலையான அரசு வேண்டும்' என்றும் அவர் கூறியிருப்பது தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் குடியரசு துணைத் தலைவருக்கு இருக்கும் உயர்ந்த மதிப்பினை, மரியாதையை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. அதற்காக குடியரசுத் துணைத் தலைவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், அதே விழாவில், ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது என்றும், ஒரு ஆட்சி அமைந்து, சட்டமன்றத்தில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டு விட்டால், பிறகு ஐந்து வருடம் கழித்து தான் மக்களிடம் செல்ல வேண்டும். அரசியல் சட்டத்தை மீறி ஆளுநர் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்றும் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், 'நான் இனி எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல' என்று அறிவித்து, அப்பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்ற முன்வந்த குடியரசு துணைத் தலைவர், சென்னை ராஜ்பவனில் அரசியல் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதுதானா என்று கேட்க முனைந்தால், அது அந்தப் பதவி மீது நான் வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் சிறுமைப்படுத்துவதாக அமைந்து விடும் என்பதால், அதுபற்றி குடியரசு துணைத் தலைவரே சுய பரிசோதனை செய்து கொள்வார் என்று நம்புகிறேன்.
ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க மறுத்து, 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு உடனே சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளாலும் எடுத்து வைக்கப்பட்டு, முந்தைய பொறுப்பு ஆளுநரிடம் முறையிடப்பட்டு, அதற்குத் தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில், இன்றைக்கு அதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும்போது, அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியிலிருக்கும் குடியரசு துணைத் தலைவர் இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது அரசியல் சட்டத்தின் மீதும், ஆளுநருக்கு உள்ள கடமைகள் மீதும், குடியரசு துணைத் தலைவர் பதவியின் கண்ணியத்தின் மீதும், நம்பிக்கை வைத்திருக்கும் என் போன்றோரை மட்டுல்ல, தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
'ஒரு அரசு மெஜாரிட்டியை நிரூபித்துவிட்டால் ஐந்து வருடங்கள் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும்' என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து, கட்சித் தாவல் சட்டத்தின் நோக்கத்திற்கும், அரசியல் சட்டப்படி ஒரு அரசு நடைபெற வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ள நாட்டின் அரசியல் சட்டத்திற்கும், நிச்சயமாக வலு சேர்ப்பதாக இல்லை என்பதை நினைக்கும்போது, வேதனை மேலும் அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல, 'ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்' என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.
ஆனால், நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் இதுபோன்ற கருத்தை வெளியிட்டு இருப்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ள இயலாதது.
குடியரசு துணைத் தலைவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், ’பாஜகவிலிருந்து விலகிவிட்டேன். இனி நான் எந்தக் கட்சியிலும் இல்லை' என்று அறிவித்தபடி, தனக்கான கடமைகளை உறுதியுடன் மேற்கொள்வதோடு, ஆளுநர் மாளிகையை இனிவரும் காலங்களில் அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தமாட்டார் என்றும் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.