அதிமுக-வுக்கு வியூகம் வகுக்கும் சுனில்... பி.கே-வை சமாளிப்பாரா?

‘முதல்வர் முடிவெடுத்துவிட்டார். இனி பின்வாங்கல் இருக்காது. திமுக.வில் கிடைத்த அனுபவங்களையும் கொண்டு அதிமுக வெற்றிக்கு சுனில் கை கொடுப்பார்’

மு.க.ஸ்டாலினுக்கு கண்ணும் காதுமாக இருந்த சுனில், அதிமுக-வுடன் கை கோர்த்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது நல்லதா, கெட்டதா? என்கிற விவாதமும் ஆளும் கட்சியில் சூடு பிடித்திருக்கிறது.

சுனில், தொடக்க காலத்தில் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பி.கே. எனப்படும் பிரசாந்த் கிஷோருடன் இருந்தவர்! பின்னர் தனியாக டீம் அமைத்துக் கொண்டு, கடந்த பல ஆண்டுகளாக திமுக.வுக்கு பணியாற்றினார். குறிப்பாக 2016 தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணத்தின் மூளையாக இயங்கியது சுனில் டீம்!

2021 தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரை திமுக ‘புக்’ செய்ததும், அங்கிருந்து சுனில் வெளியே வந்தார். கர்நாடக அரசியல்வாதி ஒருவருடன் இணைந்து அவர் பணி செய்யவிருப்பதாக தகவல்கள் வந்தன. ஏனோ அங்கு ஒத்துவராமல் மீண்டும் தமிழகம் வந்துவிட்டார். அவரைத்தான் இப்போது அதிமுக வளைத்திருக்கிறது.


சுனிலிடம் உள்ள ஒரு பிளஸ் பாயிண்ட், பிரசாந்த் கிஷோரைப் போல இவரை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதில்லை. திமுக.வுக்கு எப்படி அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாமல் பணி செய்தாரோ, அதேபோல அதிமுக.வுக்கும் பணி செய்வார் என்கிறார்கள். எனவே இவரது பணி குறித்து அதிமுக-வில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.

சென்னை அண்ணா நகரில் அலுவலகம் அமைத்து, 20 பேர் அடங்கிய டீமுடன் அதிமுக.வுக்கு பணியை சுனில் தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ‘மூவ்’களில் தெரியும் புதிய மாற்றங்களில் சுனிலின் பங்கு இருக்க வாய்ப்பு இருக்கிறது.

முக்கியமாக, 2021 தேர்தலை வைத்தே சுனிலின் பணி அமையும் என்கிறார்கள், அதிமுக வட்டாரத்தில்! ஸ்டாலினுக்கு ‘நமக்கு நாமே’ வடிவமைத்ததுபோல, அதிமுக-வுக்கு என்ன திட்டத்தை வழங்கப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரத்தில் பலமாகவே இருக்கிறது.

அதேசமயம், மு.க.ஸ்டாலினுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்த ஒருவரை, நாம் ஏன் இணைத்துக் கொள்ளவேண்டும்? இங்கிருந்து ரகசியங்கள் அவரது டீம் மூலமாக அங்கே கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்கிற குரல்களும் அதிமுக சீனியர்கள் சிலரிடம் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.

‘திமுக.வுக்கு சுனில் பெரிதாக வெற்றியை ஈட்டிக் கொடுக்கவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் இயல்பாக நாம் பிரிந்து நின்றதால் கிடைத்த வெற்றிதான். அதில்கூட நாடாளுமன்றத் தேர்தலில் காட்டிய முக்கியத்துவத்தை 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக காட்டியிருந்தால், நமக்கு சிக்கலாகப் போயிருக்கும். அதைக்கூட சரியாக செய்யாத வியூக நிபுணரை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?’ என்கிற கேள்வியையும் அதிமுக சீனியர்கள் சிலர் எழுப்புவதாக தெரிகிறது.

ஆனால், ‘முதல்வர் முடிவெடுத்துவிட்டார். இனி பின்வாங்கல் இருக்காது. திமுக.வில் கிடைத்த அனுபவங்களையும் கொண்டு அதிமுக வெற்றிக்கு சுனில் கை கொடுப்பார்’ என அதிமுக.வில் இன்னொரு தரப்பினர் நம்பிக்கை வெளிப்படுத்துகிறார்கள்.

சுனில் vs பிரசாந்த் கிஷோரின் மோதலாகவும் தமிழக தேர்தல் களம் அமையும்போல!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close