முரசொலி பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் இருந்தது என்ன?.. பொன். ராதாகிருஷ்ணன் ஆத்திரம்!

அதிகாரப்பூர்வ நாளேடு எப்படி அவர்களின் தொண்டர்களை ஏமாற்றுகிறது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம்

முரசொலி பத்திரிக்கையில் , காவிரி மேலாண்மை வாரியத்திற்காக மல்லிகார்ஜுன கார்கே போராடியதாக தவறான செய்தி  வெளியாகியுள்ளதாக மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் அதிகாரப் பூர்வ நாளிதழான முரசொலியில் கடந்த 6 ஆம் தேதி வெளியான  ஒரு புகைப்படம்  தற்போது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. 12 ஆம் பக்கத்தில்  இடம் பெற்ற இந்த புகைப்பட செய்தியில் தமிழகத்தில்  காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , திமுக எம்பிக்கள், தெலுங்க தேச கட்சியின் எம்பி ஆகியோர்  டெல்லியில் போராட்டம்  நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று  மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முரசொலி பத்திரிக்கையில் வெளியான செய்தி பொய்யானது என்றும் திமுக தொண்டர்கள்  ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுக் குறித்து அவர் பேசியதாவது, “முரசொலி பத்திரிக்கையில் வெளியான செய்தியை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் திருந்த வேண்டும். திராவிட கட்சிகள் உங்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதை உற்று நோக்க வேண்டும்.

தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகத் தான் மல்லிகார்ஜூனகார்கே, ராகுல்காந்தி போராடினார்கள். அவர்கள் கையில் வைத்திருக்கும் பேனர்கள் தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்காகத் தான். ஆந்திரா எம்பிகள் சிறப்பு அந்தஸ்து கோரியும், திமுக எம்பிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கையில் பதாகை ஏந்தி போராட்டம் செய்தனர்.

அது எப்படி கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே  தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடுவார். இந்த புகைப்படத்தின் கீழ் இடம்பெற்றுள்ள செய்தியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக நாடாளுமன்றம் முன்பு இவர்கள் போராடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது முற்றிலும் பொய்.

திமுக எப்படி அவர்களின் தொண்டர்களையே ஏமாற்றுகிறது என்பதை மக்களாகிய நீங்கள் நன்கு  புரிந்து கொள்ள வேண்டும். திமுக எம்.பிகளிலேயே ஒருவர் மட்டும் தான் கையில் பதாகை வைத்திருக்கிறார்,  இதை விட கொடுமை என்னவென்றால், அவர்கள் கையில் வைத்திருந்த பதாகை கூட எதிர் திசையில் நின்றுக் கொண்டிருந்த அதிமுக எம்.பிகளிடம் கடன் வாங்கி பெற்ற பதாகைகள்.

திமுகவின்  அதிகாரப்பூர்வ நாளேடு எப்படி அவர்களின் தொண்டர்களை ஏமாற்றுகிறது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். ” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பொன்னர் தனது கையில் முரசொலி நாளிதழை ஆதரத்திற்கு விரித்துக் காட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் நாடாளுமன்றத்தில்  திமுக, அதிமுஜ, காங்ஜ்கிரஸ்,  தெலுங்கு தேசம் கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பொன்னர்  செல்போன் மூலம் செய்தியாளர்களிடம் காட்டினார்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close