புதுவை நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்எல்ஏ-க்கள் அங்கம் வகிப்பார்கள். இதுதவிர அரசே மூன்று பேரை எம்எல்ஏ-வாக நியமித்துக் கொள்ள அதிகாரம் இருக்கின்றது. எந்தக் கட்சி ஆட்சியமைக்கிறதோ அவர்கள் மூன்று எம்எல்ஏ-க்களை நியமித்துக்கொள்வது வழக்கம். அதன்படி 3 பேரைத் தேர்வு செய்து அந்தக் கோப்பை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை ஆளுநர் சரிபார்த்துவிட்டு உள்துறைக்கு அனுப்பி வைப்பார். இறுதியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு மத்திய உள்துறை உத்தரவைப் பிறப்பிக்கும்.
அதன்படி, புதுவையில் பாஜக-வை சார்ந்த நியமன எம்எல்ஏ-க்கள் மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டனர். ஆளுங்கட்சி சாராதவர்களை நியமன எம்எல்ஏ-க்களாக அறிவித்து பாஜக அதிரடி காட்டியது. இதனையடுத்து, புதுவை அரசு பரிந்துரைக்காமல் ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்த 3 பேரை நியமன எம்எல்ஏ-க்களாக ஏற்று மத்திய அரசு உத்தரவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதற்கு காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மேலும், இதனை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் அக்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி, புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. அரசு, தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. பெருமபாலான கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரம் தொடர்பாக புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார். நியமன எம்எல்ஏ-க்களை தான் பரிந்துரை செய்யவில்லை என்றும், மத்திய அரசே நேரடியாக நியமித்தது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இவ்விவகாரத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது எனவும் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.