Poongothai aladi aruna dmk mla Hospitalized: திமுக எம்.எல்.ஏ பூங்கோதை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவகாரம், கட்சிக்குள் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. உட்கட்சிப் பிரச்னை காரணமாக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு, அவர் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் திமுக தலைமையை அதிர வைத்திருக்கிறது.
தென் மாவட்ட திமுக சீனியர்களில் ஒருவர், பூங்கோதை. திமுக.வின் அறிவு ஜீவியாக இயங்கியவர்களில் ஒருவரான ஆலடி அருணாவின் மகள்! இவர் பிரபலமான மருத்துவரும்கூட!
1993-ல் வைகோ திமுக.வை விட்டு விலகிய நேரத்தில் திருநெல்வேலியில் கலைஞர் கருணாநிதிக்கு பக்கபலமாக நின்றவர், ஆலடி அருணா. வைகோ விலகலால் டெல்லியில் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப அந்தக் காலகட்டத்தில் அருணாவையும் பயன்படுத்தினார் கலைஞர். பின்னர் 1996-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பவர்ஃபுல் சட்டத்துறையை அருணா வசம் ஒப்படைத்தார் கலைஞர்.
அப்போது மருத்துவரான பூங்கோதைக்கு, கலைஞர் குடும்பத்தினருடன் நெருக்கம் ஏற்பட்டது. அருணா மறைவுக்கு பிறகு நேரடி அரசியலில் குதித்த பூங்கோதை, தனது தந்தை வசம் இருந்த அதே ஆலங்குளம் தொகுதியின் எம்.எல்.ஏ ஆனார். 2006- 2011 திமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பையும் வகித்தார்.
2016 தேர்தலிலும் ஆலங்குளத்தில் போட்டியிட்டு ஜெயித்த பூங்கோதை, கட்சியின் மருத்துவர் அணியில் முக்கிய பொறுப்பையும் வகித்து வருகிறார். அண்மையில் தென்காசி மாவட்டத்தை இரண்டாக பிரித்தபோது, ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என பூங்கோதை எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவரது ஆலங்குளம் தொகுதியை உள்ளடக்கிய தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு ஏற்கனவே திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளராகவும், பிறகு தென்காசி மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்த வழக்கறிஞர் சிவ பத்மநாபனே நியமிக்கப்பட்டார்.
சிவ பத்மநாபனுக்கும், பூங்கோதைக்கும் அரசியல் ரீதியாக ஒத்துப் போகவில்லை. கடந்த 16-ம் தேதி ஆலங்குளத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதையொட்டி பூங்கோதை ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர்களில் மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் பெயரோ, படமோ இல்லை. இது செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரச்னையாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் நிர்வாகிகள் சிலர் தலையிட்டு இருவரையும் ஒருவருக்கொருவர் சால்வை அணிவிக்க வைத்து, அந்தக் கூட்டத்தை சுமூகமாக முடித்தனர்.
அடுத்து, நவம்பர் 18-ம் தேதி அதே ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட கடையம் என்கிற ஊரில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த பூங்கோதை, பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்தார். மேடையில் மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தார்கள்.
சிவ பத்மநாபன் தரப்பில் இருந்து பூங்கோதையை வலிந்து மேடைக்கு அழைக்கவில்லை என்கிற வருத்தம் பூங்கோதைக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மேடையில் பேசிய திமுக ஒன்றிய நிர்வாகி ஒருவர், ‘எங்கள் பகுதியில் எந்த நிகழ்ச்சிக்கும் எம்.எல்.ஏ வருவதில்லை’ என சாடினார். இது பூங்கோதையை ஆவேசமாக்கியது.
இப்படி தன்னைக் குறி வைத்து, தன் முன்னிலையிலேயே நிர்வாகி ஒருவர் பேசியதால், அங்கேயே தரையில் அமர்ந்து தர்ணா செய்தார் பூங்கோதை. பிறகு சில நிர்வாகிகள் அழைத்தபோதும், மேடைக்கு செல்ல மறுத்தார். இதையொட்டி அந்த மண்டபத்தில் இருந்த பல நிர்வாகிகள் பூங்கோதை மீது கோபமான வார்த்தைகளைக் கொட்டியதாக கூறப்படுகிறது.
இதே கூட்டத்தின் மேடையில் பூங்கோதையின் உடன்பிறந்த சகோதரரும், பொறியியல் கல்லூரி நடத்தி வருபவருமான எழில்வாணன் உட்கார்ந்திருந்தார். அவருக்கும், மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும் அண்மை காலமாக நெருக்கம் அதிகரித்திருக்கிறது. அதே சமயம் எழில்வாணனுக்கும், பூங்கோதைக்கும் இடையே குடும்ப ரீதியிலான சொத்துப் பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி சகோதரர் முன்னிலையில் கட்சிக்குள் நடந்த அவமதிப்பும் பூங்கோதையை காயப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள். இந்த நிலையில்தான் மறுநாள் (19-ம் தேதி) காலையில் வீட்டில் மயங்கிய நிலையில் அவரை மீட்டு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள் உறவினர்கள்.
மருத்துவமனைக்கு வரும்போது, உணர்வற்ற நிலையில் இருந்தார் பூங்கோதை. தீவிர சிகிச்சைக்குப் பிறகு, கண் விழித்தார். இரவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதே இதற்கு காரணம் என செய்திகள் வெளியாகின. எனினும் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘உணர்வற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது உணர்வுடன் இருக்கிறார். முக்கிய உறுப்புகள் செயல்படுகின்றன. ஐசியு-வில் சிகிச்சை அளித்து வருகிறோம்’ என பொத்தாம் பொதுவாகவே கூறப்பட்டிருக்கிறது.
அரசியல் என்பது ஆயிரம் நெருக்கடிகள் நிறைந்த துறைதான். அதிலும் பெண்கள் ஈடுபடுவது எவ்வளவு சவாலானது என்பதை மருத்துவரான பூங்கோதை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவர் கண் முன்னே வெற்றிகரமாக எத்தனைப் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் பூங்கோதைக்கு தெரியும்.
ஒரு வேளை மீடியா சொல்வதுபோல இது தற்கொலை முயற்சியாக இருந்தால், அரசியல் ரீதியாக அது இன்னும் பூங்கோதைக்கு பின்னடைவையே கொடுக்கும். நிஜமான, சரியான காரணங்கள் பூங்கோதையே சிகிச்சைக்குப் பிறகு வெளிப்படையாகப் பேசினால் தெரிய வரும்.