Advertisment

ஓவியர் மாருதி மரணம்: 2 முதல் அமைச்சர்களின் அங்கீகாரம் பெற்றவர்

தமிழ் வார இதழ்களை தனது அழகான ஓவியங்களால் அலங்கரித்தவர், தமிழ்நாட்டின் 1 முதலமைச்சர்களின் அங்கீகாரம் பெற்ற பிரபல ஓவியர், மாருதி முதுமை காரணமாக புனேவில் காலமானார். அவருக்கு வயது 85.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Popular Artist Maruthi dies, Artist Maruthi, ஓவியர் மாருதி மரணம், 2 முதல் அமைச்சர்களின் அங்கீகாரம் பெற்ற ஓவியர் மாருதி, Popular Artist Maruthi

ஓவியர் மாருதி

தமிழ் வார இதழ்களை தனது அழகான ஓவியங்களால் அலங்கரித்தவர், தமிழ்நாட்டின் 1 முதலமைச்சர்களின் அங்கீகாரம் பெற்ற பிரபல ஓவியர், மாருதி முதுமை காரணமாக புனேவில் காலமானார். அவருக்கு வயது 85.

Advertisment

ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், கண்மண போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஓவியங்களும் வரைந்து அலங்கரித்தவர் ஓவியர் மாருதி. தமிழில் வெளியான பெரும்பாலான வார இதழ்களில் வெளியான கவிதை, கதைகள், தொடர்களை ஓவியர் மாருதியின் ஓவியங்கள் அலங்கரித்து வாசகர்களை ஈர்த்து வந்தன.

வெ. இரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28 அன்று… டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

இவருடைய தந்தை வெங்கோப ராவ் ஆசிரியராகப் பணி செய்தார். அதனால், வீட்டில் கிடைக்கும் சாக்பீஸைக் கொண்டு இரங்கநாதன் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டார்.

புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு வரைப் படித்த இரங்கநாதன் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.யூ.சி. படிப்பில் சேர்ந்தார். ஓவியங்களின் மீதான ஆர்வம் காரணமாக படிப்பை பாதியில் கைவிட்டார்.

ரங்கநாதன், ஓவியர் கே. மாதவனை மானசீகக் குருவாக ஏற்று ஓவியம் பயின்றார். திரைப்படங்களுக்கு பேனர் வரையும் ஆசையில் மார்ச் 11, 1959-ல் சென்னைக்குச் சென்றார். மைலாப்பூரில் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் நிறுவனத்தில் ஓவியம் வரைதல், பெயர் எழுதும் பணி செய்தார்.

சென்னையில் ஆர்.நடராஜன் என்ற ஓவியரிடம் நடிகர் சிவக்குமாரும், இரங்கநாதனும் ஓவியம் பயின்றனர்.

இரங்கநாதன் திரைப்படங்களுக்கு பேனர் வரையும் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் நாளிதழ்களில் ஓவியம் வரையும் வாய்ப்பு பெற்றார். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் வேலை செய்வதால் பிரச்னை ஏற்படாமல் இருக்க, மாருதி என்ற பெயரில் ஓவியம் வரைந்தார். மாருதி என்ற பெயரை அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே உள்ள மாருதி பார்மசியிலிருந்து எடுக்கப்பட்டதென ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இப்படித்தான் ரங்கநாதன் ஓவியர் மாருதி ஆனார்.

இவருடைய ஓவியம் மாருதி என்ற பெயரில் ஏப்ரல் 20, 1969-ல் குமுதம் வார இதழில் வெளியானது. அந்த இதழில் 'அய்யோ பாவம்' என்ற சிறுகதைக்கு ஓவியம் வரைந்திருந்தார்.

ஓவியர் மாருதி தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு ஊழியரான விமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுபாஷினி, சுஹாசினி என 2 மகள்கள் உள்ளனர்.

ஓவியர் மாருதி கண்மணி, பொன்மணி, விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்தார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது.

ஓவியர் மாருதிக்கு தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். ஓவியப் பணிகளையும், வீடும் தந்தார். அதேபோல, முன்னாள் முதல்வரான மு. கருணாநிதி, இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவில் அவரது கடல்போர் உள்ளிட்ட சில படைப்புகளுக்கு ஓவியம் வரையும் வாய்ப்பு அளித்தார். இப்படி ஓவியர் மாருதியை எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகிய 2 முதல்வர்களும் அங்கீகரித்தனர்.

ஓவியர் மாருதி முதுமை காரணமாக புனே நகரில் மகள் வீட்டில் வசித்து வந்தார். முதுமையால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, ஜூலை 27 வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார். இவருடைய மனைவி விமலா கொரோனா காலத்தில் மறைந்தார்.

ஓவியர் மாருதி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாசகர்கள், ஓவிய ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment