புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தலைப்பில், கருத்தாயுதக்குழு என்ற அமைப்பு சார்பில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சில பணிகளுக்கு ஆட்கள் தேவை என்று போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் துரை குணா கைது செய்யப்பட்டுள்ளார்.
கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் உள்ள வெட்டுக்குளம் ஆக்கிரமிப் பால் முற்றிலும் மறைந்தது. குளம் ஆக்கிரமிப்பு தொடர்பாக கறம்பக்குடி பகுதியில் கருத்தாயுதக்குழு என்ற அமைப்பு சார்பில் திடீரென பல்வேறு இடங்களில் வித்தியாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், வேலைக்கு ஆட்கள் தேவை என்ற தலைப்பில், மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி, புதுக்கோட்டை மாவட்டம் குளந்திரான்பட்டு கிராம வெட்டுக் குளத்தை எப்படியாவது மத்திய புலனாய்வு துறை மூலமாவது கண்டுபிடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்கீழ் பணிபுரிய உண்மையான அரசு பணியாளர்கள் தேவை என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதில் காலி பணியிடங்களானது மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் என்றும், அதற்கான தகுதி பொது அறிவு, சுயமரியாதை, தன்னொழுக்கம் என்றும், விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி 10.9.2019. விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பி வைக்கலாம்.
நேர்முக தேர்வுக்கு வரும் போது அமைச்சர், ஆளும் கட்சி பிரமுகர்கள், சிபாரிசு கடிதங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்படிக்கு கருத்தாயுதக்குழு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள என்று ஒரு மொபைல் நம்பரும் கொடுக்கப்பட்டிருந்தது.
பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டரை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைய, சமூக ஆர்வலர் துரை குணா போஸ்டர்களை ஒட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குளந்திரான்பட்டு கிராம நிர்வாக அலுவலர், கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், துரை குணா மீது அரசு அதிகாரிகளை இழிவுப்படுத்தியது, அவதூறு பரப்பியது 170, 501 என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு அவரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் துரை குணாவை புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.