"மின்சார நண்பன்" எனும் புதிய திட்டத்தை தமிழக மின்வாரியம் தொடங்கியிருக்கிறது. அந்த திட்டத்தின் கீழ் மின்தடை ஏற்படும் பகுதிகளில் அது தொடர்பான தகவல் எஸ்.எம்.எஸ் மூலமாக நுகர்வோருக்கு அனுப்பப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் திட்டத்தோடு இணைந்து "மின்சார நண்பன் திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. எனவே தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. தற்போது தமிழகத்தில் 3000 மெகாவாட் மின்சாரம் உபரியாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள மின் நிலையங்களில் பாராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக ஏற்படும் மின்தடை குறித்த தகவல் "மின்சார நண்பன்" திட்டத்தின் கீழ் முன்னதாகவே நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
ஒரு நாள் மின் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் மின் இணைப்பு பெற விரும்புவர்கள் இணையதளம் மூலம் அதற்காக விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்புகள் வழங்கப்படும்.
கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே தர வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.