Advertisment

குறுவை சாகுபடி கருகும் நிலையில் வேளாண் சங்கமம் தேவையா? - பி.ஆர்.பாண்டியன்

காவிரி டெல்டாவில் குறுவை பயிர் கருகுவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலையில் வேளாண் சங்கமம் நிகழ்ச்சி தேவையா? என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PR Pandian questions, Is there need for an Velan sangamam festival in lose of kuruvai crops, குறுவை சாகுபடி கருகும் நிலையில் வேளாண் சங்கமம் தேவையா, பி.ஆர்.பாண்டியன், PR Pandian, Velan sangamam festival, lose of kuruvai crops

பி.ஆர். பாண்டியன்

காவிரி டெல்டாவில் குறுவை பயிர் கருகுவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலையில் வேளாண் சங்கமம் நிகழ்ச்சி தேவையா? ஆத்மா குழு திமுக நிர்வாகிகளின் குழுவாக அமைத்து முதலமைச்சரின் விளம்பரத்திற்காக நிதிகள் வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் வளையமாதேவி கிராமத்தில் முதிர்ந்த பயிரை ராட்சத மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு அழித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயல் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. வளரும் பயிரை அழிப்பதற்கு சட்டரீதியாக யாருக்கும் அனுமதி கிடையாது.

பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுவதை காவல்துறை கொண்டு அடக்குமுறை கட்டவிழ்த்து விடுவதும், பயிர்களை அழிப்பதும் மனிதநேயமற்ற செயல் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து முதலமைச்சர் உடனடியாக தடுத்து நிறுத்த முன் வர வேண்டும்.

காவிரியில் உரிய காலத்தில் தண்ணீரை பெறாமல் குறுவை சாகுபடிக்கு உரிய திட்டமிடல் இல்லாத நிலையில் ஜூன் 12-ல் காவிரி நீர் திறக்கப்பட்டது. நீர் மேலாண்மையில் ஏற்பட்ட குளறுபடியால் காவிரி டெல்டாவில் 3.50 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு செய்து நெற்பயிர்கள் கருகுவதை பார்த்து கண்ணீர் விட்டு விவசாயிகள் கதறுகிறார்கள். பல கிராமங்களில் முளைத்த பயிர்களை டிராக்டரை வைத்து உழவு செய்து அழித்து வருகிறார்கள்.

அதேபோல் பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் பயிரை டிராக்டர் விட்டு அழித்து வருகிறார்கள். தேங்காய்க்கும் உரிய விலை கிடைக்காமல் வீதியிலேயே கொட்டி விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த பாதிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளை பாதுகாக்க முன்வராத முதலமைச்சர் விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறுகிறபோது திருச்சியில் வேளாண் சங்கமம் நடத்துவது தேவையா? என்பதை உணர வேண்டும். அவ்வாறு பங்கேற்க வரும் முதலமைச்சர் குறுவை பாதிப்பை டெல்டா மாவட்டங்களில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவிக்க முன்வர வேண்டும்.

மத்திய அரசால் ஒதுக்கப்படுகிற ஆத்மா திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுக்கள் விவசாயிகள் பெயரில் மாநில, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி அளவிலான குழுக்கள் முழுமையும் திமுக நிர்வாகிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது. இதற்காக ஒதுக்கப்படும் நிதி தமிழ்நாடு முழுமையிலும் முதலமைச்சர் பங்கேற்கும் விழாக்களுக்காக செலவழித்து விவசாயிகள் என்கிற பெயரில் விளம்பரத்திற்காக வீணடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய நிதிகள் எல்லாம் தன்னுடைய கட்சி நலனுக்காக முதலமைச்சர் பயன் படுத்துகிறாரோ? என அஞ்சத் தோன்றுகிறது. இச்செயல் விவசாயிகளின் வளர்ச்சியை தடுக்கும் உள்நோக்கும் கொண்டது.

மாவட்ட வேளாண் உற்பத்திக்காண உயர்மட்ட ஆலோசனை குழுக்கள் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உறுப்பினராக இருந்த விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே, அரசியல் தலையீடின்றி வேளாண் வளர்ச்சிக்கான ஆத்மா திட்டம் முதல் அனைத்து குழுக்களும் விவசாயிகளை கொண்டு அமைக்க முன்வர வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாட்டு அணை கட்டுவதற்கு 2022 தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட வரைவு திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை நிராகரித்துவிட்டது. தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கிற கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான சாதக பாதகம் குறித்த ஆய்வு செய்வதற்கும் மாற்று குறித்து ஆய்வு என்ற பெயரில் அணை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு வனத்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைத்திருப்பது சட்டவிரோதமானது. இது குறித்து முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது தமிழ்நாடு விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரும் துரோகமாகும்.

குறுவை பாதிக்கப்பட்ட பயிருக்கு 3-வது ஆண்டாக காப்பீடு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திய தமிழ்நாடு அரசு,ஏக்கர் ஒன்றுக்கு 35,000-ம் ரூபாய் இழப்பீடாக வழங்கி விவசாயிகளை தற்கொலையிலிருந்து பாதுகாக்க முன்வர வேண்டும்.

தற்போது கிடைக்கும் தண்ணீரை கொண்டு ஒருபோக சம்பா சாகுபடி திட்டத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதை காலத்தால் திட்டமிட்டு சாகுபடி பணியை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

நாகப்பட்டினம் முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை வேளாண் தொழில் வட சாலை என பெயர் சூட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது.

இதுவரையிலும் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் எதுவும் துவக்கப்படவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை என்றார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, செய்தி தொடர்பாளர் மணிமாறன், வலங்கைமான் நிர்வாகிகள் ஆவூர் குமார், பிரபு, விக்கி கார்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.

திருச்சியில் தமிழக முதல்வர் நாளை வேளாண் சங்கமம் கண்காட்சியை திறந்து வைக்கவிருக்கும் நிலையில், விவசாயிகள் மத்தியில் இந்தக் கண்காட்சிக்கு எதிர்ப்பு கிளப்பியிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றது.

செய்தி: க. சண்முகவடிவேல்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment