PM Narendra Modi's Brother Prahlad Modi At Chennai: பிரதமர் நரேந்திர மோடி சகோதரர் பிரகலாத் மோடியின் சென்னை வருகை உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. சென்னையில் அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறாரா?
பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி. இவர் குஜராத் மாநிலத்தில் நியாய விலைக் கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி விதிமுறையை மீறி கட்டடம் கட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் இவர்!
பிரகலாத் மோடி, நேரடி அரசியலில் இல்லை. ஆனால் நேற்றும் (செப்டம்பர் 17), இன்றும் (செப்டம்பர் 18) தமிழ்நாட்டில் அவரது நிகழ்ச்சிகள் அரசியல் மயமாகியிருக்கின்றன. பிரதமரும் தனது அண்ணனுமான நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி (செப்டம்பர் 17) திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை செய்யவே இங்கு வந்திருக்கிறார் பிரகலாத் மோடி.
TN Deputy CM O.Panneerselvam Met PM Modi's Brother: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு:
சென்னை கிண்டியில் ஆளுனர் மாளிகையான ராஜ் பவனில் தங்கியிருந்த பிரகலாத் மோடியை நேற்று தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். பல்வேறு விவகாரங்களில் டெல்லி ஆதரவை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க டெல்லியில் முகாமிட்ட ஓ.பன்னீர்செல்வம், அவரது வீடு வரை சென்றுவிட்டு சந்திக்காமல் திரும்பியது குறிப்பிடத்தக்கது. பிரகலாத் மோடியுடன் நடந்த சந்திப்பு, அதிமுக.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கை அதிகரிக்கும் என ஒரு தரப்பினர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
எனினும் சென்னையில் நேற்று பிரகலாத் மோடியும் ஓபிஎஸ் நடத்திய சந்திப்பு குறித்த செய்தியையோ, புகைப்படத்தையோ இரு தரப்புமே அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. பிரகலாத் மோடி அதை விரும்பவில்லை என்கிறார்கள்.
அதேபோல அரசியல் நிகழ்ச்சிகளை தவிர்க்கக் கூடியவரான பிரகலாத் மோடியை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்க வைத்தார்கள். நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா என்ற அடிப்படையிலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்றதாலும் அந்த நிகழ்ச்சியில் பிரகலாத் மோடி கலந்து கொண்டாராம்.
இந்த நிகழ்ச்சி புகைப்படங்களில் பிரகலாத் மோடி தென்பட்டாலும், பாஜக.வின் செய்திக் குறிப்புகளில் அவரது பெயரை தவிர்த்தார்கள். பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி குறித்து தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலும் பிரகலாத் மோடியின் பெயரை தவிர்த்துவிட்டார்.
வாரிசு அரசியல் என இதை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்யும் சூழல் வரலாம் என்பதாலேயே இந்த உஷார் நடவடிக்கை! எனினும் பிரகலாத் மோடியின் அரசியல் பயணம் சென்னையில் ஆரம்பித்துவிட்டதாகவே பேசப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற நியாய விலைக்கடை பணியாளர்கள் பேரணி ஒன்றில் கலந்துகொண்ட பிரகலாத் மோடி, மத்திய அரசுக்கு எதிராக பேசியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
https://t.co/quP52FmWix
WISH YOU HAPPY BIRTHDAY NAMO JI..JAI HIND JAI NAMO— PRAVEEN KUMAR KORPOLE (@KorpoleKumar) 17 September 2018
இன்று (செப்டம்பர் 18) அதிகாலையில் திருப்பதி கோவிலுக்கு சென்ற பிரகலாத் மோடி, அங்கு நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். சென்னை, தாம்பரத்தில் இன்றும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பிரகலாத் மோடி கலந்து கொள்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.