scorecardresearch

எம்.பி. பதவி கேட்கும் தேமுதிக! ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ அரசியலில் நிறைவேறுமா?

Tamil Nadu News: ஒரு இடத்தை அதிமுக கொடுத்தால், பிரேமலதாவின் சகோதரரும் இளைஞரணி செயலாளருமான எல்.கே.சுதிஷ் எம்.பி ஆவார்.

எம்.பி. பதவி கேட்கும் தேமுதிக! ‘ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ அரசியலில் நிறைவேறுமா?
tamilnadu news today live updates

Tamil Nadu Rajya Sabha Election News: பிரேமலதா விஜயகாந்த் திடுதிப்பென இப்படி அதிர்ச்சி அணுகுண்டை வீசுவார் என அதிமுக.வினர் எதிர்பார்க்கவில்லை. நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக.வுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஒரு இடம் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் அவர்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘கடந்த லோக்சபா தேர்தல் கூட்டணியின்போது, எங்களுக்கு ராஜ்யசபா சீட் தருவது பற்றி பேசப்பட்டது. நாங்கள் கூட்டணி தர்மப்படி நடந்து வருகிறோம். அதிமுக.வும் அப்படி நடந்துகொள்ளும் என நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்’ என கூறியிருக்கிறார். இதற்கு திருச்சியில் பதிலளித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ‘இது பற்றி நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்யப்படும்’ என கூறியிருக்கிறார்.


தமிழகத்தில் இதுபோல ராஜ்யசபா தேர்தல் சீட் தருவதாக கட்சிகள் ஒப்பந்தம் போடுவது புதிதல்ல. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போதும் திமுக அணியில் வைகோவுக்கும், அதிமுக அணியில் பாமக.வின் அன்புமணிக்கும் ராஜ்யசபா சீட்டுக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அவை எழுத்துபூர்வமானவை. 2019 லோக்சபா தேர்தலுக்கு அடுத்து நடந்த ராஜ்யசபா தேர்தலின்போதே அவை நிறைவேற்றப்பட்டன.

ஆனால் அதிமுக அணியில் தேமுதிக.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துபூர்வ ஒப்பந்தம் இல்லை. தவிர, இதை எந்த அளவுக்கு உறுதியாக அதிமுக குறிப்பிட்டது என்பதும் தெரியவில்லை. ‘பரிசீலிக்கிறோம்’ என்கிற அளவில் மட்டுமே அதிமுக குறிப்பிட்டிருந்தால், இப்போது சீட் ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.

காரணம், அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகள் மேயர் பதவி, நகராட்சித் தலைவர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பு இருந்த ஒரே காரணத்தால், நேரடித் தேர்தலையே அதிமுக தரப்பு ரத்து செய்தது. அப்படி இருக்கையில், ராஜ்யசபா எம்.பி. பதவியை தூக்கிக் கொடுத்துவிடுவார்களா? என்பது சந்தேகம்தான்.

அதிமுக.வுக்கு வருகிற தேர்தலில் எந்த அளவுக்கு தேமுதிக தேவைப்படுகிறதோ, அதைவிட சற்று அதிகமாக தேமுதிக.வுக்கும் அதிமுக தேவைப்படுகிறது. எனவே தேமுதிக நெருக்கடி கொடுத்து எம்.பி. பதவி பெறுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. தேமுதிக தரப்பில் இதற்காக டெல்லி உதவியை நாடும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் இருந்து 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். திமுக, அதிமுக தலா 3 இடங்களை கைப்பற்ற முடியும். ஒருவேளை தேமுதிக.வுக்கு ஒரு இடத்தை அதிமுக ஒதுக்கிக் கொடுத்தால், பிரேமலதாவின் சகோதரரும் இளைஞரணி செயலாளருமான எல்.கே.சுதிஷ் எம்.பி ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Premalatha vijayakanth dmdk tamil nadu rajya sabha election aiadmk