ஜனாதிபதி தேர்தலில் சென்னையில் மட்டும் 234 பேர் வாக்களித்தனர். அவர்களில் மத்திய அமைச்சர் பொன்னாரும், கேரள எம்.எல்.ஏ. ஒருவரும் அடக்கம்!
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்? என்பதை நிர்ணயிக்க பாராளுமன்ற அலுவலகத்திலும், அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் இன்று (ஜூலை 17) வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்றக் குழுக்கள் கூடும் அறையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, டெல்லியில் இருந்து வந்திருந்த பார்வையாளர் அன்சு பிரகாஷ் ஆகியோர் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை கண்காணித்தனர்.
காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்களிக்க அவகாசம் இருக்கிறது.
ஆனாலும் தமிழக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காலையிலேயே வந்து வாக்களித்தனர்.
திருவாரூர் எம்.எல்.ஏ.வான தி.மு.க. தலைவர் கருணாநிதி வருவாரா? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘பொறுத்திருந்து பாருங்கள்!’ என்றார். இன்றும் சட்டமன்றத்திற்கு வந்த ஸ்டாலினிடம் அதே கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அப்போது, ‘கருணாநிதி வரவில்லை’ என பதிலளித்தார் ஸ்டாலின்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் காலியாக இருக்கிறது. கருணாநிதியும் ஓட்டு போடாததால், எஞ்சிய 232 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்.
அ.தி.மு.க.வின் 50 எம்.பி.க்களும், தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்களான கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் டெல்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் வாக்களித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பா.ஜ.க.வோ, காங்கிரஸோ வாக்குறுதி தராததால் பா.ம.க. எம்.பி. அன்புமணி தேர்தலை புறக்கணித்தார். தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஒரே எம்.பியான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அனுமதி பெற்று சென்னையில் எம்.எல்.ஏ.க்களுடன் வாக்களித்தார். அதேபோல சென்னையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கேரள எம்.எல்.ஏ. அப்துல்லாவும் சிறப்பு அனுமதி பெற்று சென்னையில் தமிழக சட்டமன்ற வளாகத்தில் வாக்களித்தார். இதனால் சென்னையில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 234 ஆனது.
வாக்குப்பெட்டி பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலமாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜூலை 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வின் 88 எம்.எல்.ஏ.க்கள் (கருணாநிதியை தவிர்த்து), காங்கிரஸின் 8 எம்.எல்.ஏ.க்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர், அ.தி.மு.க. அணியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு வாக்களித்ததாக கூறியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வின் இரு அணிகள், முக்குலத்தோர் புலிப்படை எம்.எல்.ஏ. கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு என எஞ்சிய 134 பேர் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது.
வாக்களிக்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘கட்சி எடுத்த முடிவுப்படி எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தார்கள்’ என்றார்.
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டியுமே தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் வாக்களிக்கும் முடிவை எடுத்தார்கள். ஆனால் மத்திய அமைச்சர் பொன்னார் மட்டும் விதிவிலக்காக சென்னையில் வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்து அ.தி.மு.க. வட்டாரங்களில் பேசியபோது, “தமிழகத்தில் அ.தி.மு.க. அணிகளுக்குள் நிலவும் குழப்பம் காரணமாக கடைசி நிமிடத்தில் டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மாற்று நிலைப்பாடை எடுத்துவிடக்கூடாது என பா.ஜ.க. மேலிடம் பதறியது. எனவே தமிழகத்தில் ஆதரவு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ராம்நாத் கோவிந்துக்கு பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை பொன்னாரிடமே ஒப்படைத்தனர். அவர் கடைசி நிமிடம் வரை அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்து, அனைவரையும் வாக்களிக்க வைத்தார்!’ என கூறினார்கள்.
ஆனாலும் டி.டி.வி. ஆதரவாளர்கள் ஏற்கனவே முடிவு செய்தபடி, பா.ஜ.க.வுக்குத்தான் வாக்களித்தார்களா? என்பது 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போதுதான் உறுதியாக தெரிய வரும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.