தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள், தங்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இதனையடுத்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களுக்கான ஆதரவை கோரி வருகின்றனர். அந்த வகையில் ராம்நாத் கோவிந்த் மற்றும் மீராகுமார் ஆகிய இருவரும் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.
தமிழகம் வந்த ராம்நாத் கோவிந்த், அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பி-க்களை சந்தித்து ஆதரவு கோரினார். அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். ராம்நாத் கோவிந்துக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், பாஜக வேட்பாளருக்கு ஆதரவில்லை என அதிமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஏனைய கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களான தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோரும் முதல்வர் பழனிச்சாமி - ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற விழாவை புறக்கணித்துள்ளனர்.
அதேபோல், இன்று மாலை சென்னை வந்தடைந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்வின் போது, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். அதன்பின்னர், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலாபுரம் இல்லத்துக்கு சென்ற மீராகுமார், அவரிடம் நேரில் ஆதரவு கோரினார். மீராகுமாரை பொது வேட்பாளராக கருதி வெற்றிபெற செய்ய வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.