/tamil-ie/media/media_files/uploads/2017/06/TN-Government-Admk-TTV-Dinakaran.jpg)
டிடிவி தினகரன்
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை ஆதரிக்க முடியாது என்று டிடிவி தினகரன் ஆதரவு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், தமிழக ஆளும் கட்சியான அதிமுகவின் இரண்டு அணிகள் பிஜேபி வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தன. இன்று டெல்லியில் நடைபெறும் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் இருவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தம்பித்துரை, ‘தலைமை கழகம் கூடிதான் முடிவெடுத்துள்ளது. தலைமை கழகம் என்பது பொது செயலாளர் சசிகலாவையும் உள்ளடக்கியதுதான்’ என்று சொன்னார்.
நேற்று முன் தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிஜேபி வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று காலை டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தினார்கள். இன்றும் ஆலோசனை தொடர்ந்தது. ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘எடப்பாடி முடிவை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். அவர் கட்சியில் தலைமை நிலைய செயலாளர் மட்டுமே. கட்சியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான். பொது செயலாளர் சசிகலாதான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். சசிகலா என்ன சொல்கிறாரோ அதைத்தான் நாங்கள் கேட்போம். சிறையில் தம்பிதுரையிடம் சசிகலா என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியாது ’ என்றார்.
எப்போது சசிகலா முடிவை அறிவிப்பார் என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள் சசிகலா அறிவிப்பார்’ என்றார்.
தினகரன் ஆதரவாக 34 எம்.எல்.ஏ.கள் சுமார் 10 எம்பிக்கள் இருக்கின்றனர். இவர்கள் எடுக்கப் போகும் முடிவு ஜனாதிபதி தேர்தலை பாதிக்கிறதோ இல்லையோ, தமிழக அரசின் நிலைத்தன்மையை பாதிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.