/tamil-ie/media/media_files/uploads/2017/06/Thamim.jpg)
இஃப்தார் நிகழ்ச்சியில் மதச்சார்பின்மை குறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்த 2 மணி நேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவு அளித்துள்ளார். இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானது என மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்தார் நிகழ்ச்சி நடத்திய 2 மணி நேரத்திற்குள் ‘ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு’ என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்தார் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக பயணிப்போம் என்றும் பேசினார்.
அவ்வாறு பேசிய 2 மணி நேரத்திற்குள் அவர் எடுத்திருக்கும் முடிவு அரசியல் அரங்கில் ஆழமான விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானது என்பதில் ஐயமில்லை. இது அ.தி.மு.க. தொண்டர்களின் மனநிலைக்கும் எதிரானது என்பது தான் உண்மை.
இந்த விஷயத்தில் ஏற்கனவே அறிவித்த முடிவில் மனித நேய ஜனநாயக கட்சி தெளிவாக இருக்கிறது. அடிப்படை கொள்கைகளில் சமரசம் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் எங்கள் ஆதரவு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் சமய சார்பற்ற, சமூக நீதியை மதிக்கும் ஒருவருக்கே என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். பதவிகளை விட எங்களுக்கு கொள்கைகளே முக்கியம், நாட்டு நலனை காக்க, சமூக நீதி சக்திகளுடன் இணைந்து இந்த விஷயத்தில் செயலாற்றுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.