கோவை மாவட்டம் மயிலேறிபாளையம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் ஏராளமான கிராம பகுதிகளிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், மயிலேறிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாதந்திர சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து மாத்திரை எழுதி கொடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்குள்ள மாத்திரை கவுண்டரில் மாத்திரை வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அது காலாவதியான மாத்திரை என தெரியவந்தது. அந்த மாத்திரை அட்டையில் ஜூன் மாதம் காலாவதியான தேதி குறிப்பிட்டு இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கு சென்று இதுபோன்ற காலாவதியான மாத்திரையை எப்படி தைரியமாக கொடுக்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.
படிக்காத மக்கள் வாங்கி சென்று சாப்பிட்டால் அவர்களின் நிலைமை என்ன? இதற்கு நீங்கள்தான் ஒரு தீர்வு காண வேண்டும் என்றார். அதே போல் மயிலேறிபாளையம் சுகாதார நிலையத்திற்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த மக்கள் மருந்து கொடுக்குமிடத்தில் இருக்கும் மாத்திரைகளை எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.
அந்த பெண் சொன்னது போல காலவதியான மாத்திரைகளை கிராம மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மையத்தில் இருக்கும் செவிலியர்களிடத்தில் மக்கள் கேட்டதற்கு மருத்துவரை கேட்டுக் கொள்ளுங்கள் என பதில் வந்தது என கூறப்படுகின்றது.
மருத்துவ அறையில் இருந்த மருத்துவரோ நான் தற்காலிகமாகத்தான் வந்துள்ளேன் என்று தகவல் கூறியுள்ளார். கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சுகாதார மையத்தில் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”