சென்னையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவினர் கொண்டாடுவது வழக்கம். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அக்கட்சிக்குள் பல்வேறு குழப்பங்களும், உட்கட்சி பூசல்களும் அரங்கேறி வருகின்றன. ஆனாலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாட அக்கட்சியினர் முடிவு செய்தனர்.
அந்த வகையில், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அவ அற வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆர் சிறப்பினை நினைவு கூறும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவினை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தமிழ்நாடு அரசின் சார்பில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் நடத்தப்படும். இவ் விழாக்களில் நானும், அமைச்சர்களும் பங்கேற்க உள்ளோம். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், எம்ஜிஆரின் சாதனைகள், சமுதாய சேவைகள் மற்றும் மக்கள் நலத் திட்ட உதவிகள் ஆகியவற்றை விளக்கும் வகையில், பேரணிகள் நடத்தப்படும். அத்துடன், அவரது சாதனைகளை விளக்கும் கண்காட்சிகள் நடத்தபப்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக, முதல்வர் பழனிசாமி மட்டுமே தலைமையேற்று பங்கேற்ற இந்த விழாவில் தற்போது அணிகள் இணைப்புக்கு பின்னர் துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசை மத்தியில் ஆளும் பாஜக இயக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.