காலை 10:24: அடையாறு கடற்படை தளத்திலிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காலை 10:20: தமிழக அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், தனுஷ், சூர்யா, சிவக்குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர், விழாவில் கலந்துகொண்டனர்.
காலை 9.58: பிரதமர் நரேந்திர மோடி அடையாறு கடற்படை தளத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் தமிழக மழை பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில், தினத்தந்தி பவள விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு செல்ல உள்ளார். இந்த விழாவில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.
காலை 9.23: பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எம்.பி. இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் வரவேற்றனர்.
பின்னணி:
தினத்தந்தி நாளிதழின் பவள விழா மற்றும் திருமண விழாவில் கலந்துகொள்ள ஒருநாள் பயணமாக இன்று (திங்கள் கிழமை) சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினத்தந்தி நாளிதழின் 75-ஆம் ஆண்டு பவள விழா சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். காலை 11.30 மணியளவில் இந்த விழாவில் கலந்துகொள்ளும் மோடி, அங்கிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் சோமநாதன் என்பவரின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்கிறார்.
கருணாநிதியை சந்திக்கும் மோடி:
அதன்பின், 12.45 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து மீண்டும் டெல்லி திரும்ப உள்ளார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மோடி திமுக தலைவர் கருணாநிதியை நண்பகல் 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், "தமிழகத்திற்கு வருகை தரும் நரேந்திர மோடி, மூத்த அரசிய தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியை சந்திக்க உள்ளார்", என பதிவிட்டார்.
November 2017During his visit to Tamil Nadu today, PM Sh Narendra Modi ji will visit senior most leader from the state and former CM Sh M. Karunanidhi.
— P Muralidhar Rao (@PMuralidharRao)
During his visit to Tamil Nadu today, PM Sh Narendra Modi ji will visit senior most leader from the state and former CM Sh M. Karunanidhi.
— P Muralidhar Rao (@PMuralidharRao) November 6, 2017
பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி அதன்பின் கோவைக்கு வந்தாலும் ஒரு ஆண்டு கழித்து, மீண்டும் சென்னைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.