முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கலாமின் உறவினர்களுடன் மோடி அளவளாவினார்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கியிருக்கும் மாவட்டம் ராமநாதபுரம். நவீன உலகம் தவிர்க்க முடியாத விஞ்ஞானி அப்துல் கலாமை தந்ததும் இந்த மாவட்டம்தான்! விஞ்ஞானியாக உச்சம் தொட்ட அப்துல் கலாம் ஜனாதிபதி பதவியேற்றதும் மக்களின் மனம் கவர்ந்தார். இளைஞர்களை உத்வேகப்படுத்துவதை தனது கடமையாக நினைத்து செய்தார்.
2015-ம் ஆண்டு இதே ஜூலை 27-ம் தேதி மறைந்த அந்த மாமேதைக்கு அவரது சொந்த ஊரில் மணி மண்டபம் எழுப்ப மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம், பேக்கரும்பு என்ற இடத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கிக் கொடுத்தது. அந்த இடத்தில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் கண்கவர் மணிமண்டபத்தை மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வளர்ச்சி நிறுவனம் கட்டி முடித்துள்ளது.
கலாம் உருவாக்கிய அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 750-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 90 ஓவியங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று(வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் முகாமில் வந்து இறங்கினார்.
அங்கு அவரை கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்வர் எடப்பாடி, அமைச்ச்ர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்னார், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ஆகியோர் வரவேற்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு ஆகியோரும் வந்திருந்தனர்.
பிறகு கார் மூலமாக அப்துல் கலாம் மணி மண்டபம் அமைந்துள்ள பேக்கரும்பு வந்தார். அங்கு கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை மோடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் அப்துல் கலாம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார். அங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை மோடி சுற்றிப் பார்த்தார். மணி மண்டபத்தின் மையப்பகுதியில் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மோடி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராமேசுவரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் ‘அப்துல்கலாம்-2020’ என்ற சாதனை பிரசார வாகனத்தை அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மண்டபம் முகாம் அருகே இந்திய கடலோர காவல்படை குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட விழா மேடைக்கு வருகிறார். தொடர்ந்து ராமேசுவரம்-அயோத்தி இடையேயான புதிய ரெயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய-மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி மதுரை மற்றும் ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.