முரசொலி பவள விழாவில் பத்திரிகை அதிபர்களும், அரசியல் தலைவர்களும் அணிவகுக்கிறார்கள். சென்னையில் 2 நாட்கள், 3 இடங்களில் இந்த விழா நடக்கிறது.
தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலிக்கு வயது 75! இதையொட்டி முரசொலியின் பவளவிழாவை பிரமாண்டமாக கொண்டாட முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் முடிவெடுத்தார். அதன்படி ஆகஸ்ட் 10, 11 ஆகிய இரு தினங்களில் சென்னையில் 3 இடங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
விழாவின் தொடக்கமாக ஆகஸ்ட் 10-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முரசொலி வளாகத்தில் காட்சி அரங்கம் திறப்பு விழா நடக்கிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். இந்து நாளிதழ் குழும தலைவர் என்.ராம் கலந்துகொண்டு, காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். முரசொலியை கையெழுத்து பிரதிநிதியாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடங்கி நடத்தியது முதல் பல அபூர்வ புகைப்படங்கள் இந்தக் காட்சியில் வைக்கப்படுகின்றன.
அன்று மாலை 6 மணிக்கு சென்னை சேப்பாக்கம், ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் முரசொலி பவளவிழா வாழ்த்தரங்கம் நடக்கிறது. இந்த விழாவுக்கு முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் தலைமை தாங்குகிறார். இந்து என்.ராம், கலைஞானி கமல்ஹாசன், தினத்தந்தி அதிபர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், கவிஞர் வைரமுத்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ்குமார் சந்தாலியா, ஆனந்தவிகடன் மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டெக்கான் கிரானிக்கல் ஆசிரியர் பகவான்சிங், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண்ராம், தினகரன் செய்தி ஆசிரியர் மனோஜ்குமார், நக்கீரன் ஆசிரியர் கோபால் என பத்திரிகை அதிபர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்திப் பேசுகிறார்கள்.
மறுநாள் (11-ம் தேதி) மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுத் திடலில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். பவளவிழா மலரை இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரான நல்லகண்ணு வெளியிடுகிறார். முரசொலி மேலாளர் தட்சிணாமூர்த்தி அதை பெற்றுக்கொள்கிறார். முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரான மு.க.ஸ்டாலின் நன்றி கூறுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் எஸ்றா.சற்குணம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்.குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, பார்வர்ட் பிளாக் பி.வி.கதிரவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஆதி தமிழர் பேரவை அதியமான், தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூர் அல்தாப், தேசிய லீக் பஷீர் அகமது, வல்லரசு பார்வர்ட் பிளாக் அம்மாவாசி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க இனிகோ இருதயராஜ் என 23 தலைவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இரு நாட்கள் நடைபெறும் விழாவிலும் தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக பங்கேற்கும்படி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனவே மாநிலம் முழுவதும் இருந்து தி.மு.க.வினர் மாநாடு போல சென்னையில் கூடுகிறார்கள். இந்த விழாவுக்கான அழைப்பிதழை அண்மையில் ஸ்டாலினும், பேராசிரியர் அன்பழகனும் தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் நேரில் வழங்கினர். முரசொலி நிறுவனரான கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்க இயலாத உடல்நிலையில் இருப்பதுதான் உடன்பிறப்புகளுக்கு ஒரே சோகம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.