சென்னை அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகில் மவுன சாமி மடம் சாலையில் எஸ்.எஸ்.வி.கே. என்ற தனியாருக்கு சொந்தமான அபார்ட்மென்ட் ஒன்று உள்ளது. 2 மாடிகளை கொண்ட இந்த அபார்ட்மென்ட்டில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன.
இதன் தரை தளத்தில் உள்ள வீட்டில் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. ஊழியர் சந்திரசேகரன் (69), அவரது மனைவி உமா (64), மகன் விசுவநாதன் (32), மருமகள் புவனா (30), பேரக்குழந்தை ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
நேற்று (சனி) மாலை உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க விசுவநாதன், புவனா ஆகியோர் தங்கள் குழந்தையுடன் சென்று விட்டனர். வீட்டில் சந்திரசேகரனும், உமாவும் மட்டும் இருந்துள்ளனர். உடல் நலம் குன்றியுள்ள சந்திரசேகரன், இரவு 7 மணியளவில் மாத்திரை போட்டு விட்டு கட்டிலில் படுத்திருந்தார். உமா சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சந்திரசேகரனின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. பதறியடித்துக் கொண்டு உமா அங்கு சென்று பார்த்த போது, சந்திரசேகரனின் அறை 10 அடி ஆழத்துக்கு பூமிக்குள் இறங்கி இருந்தது. சந்திரசேகரும் 10 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து கிடந்தார். இதைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு முதல் மற்றும் 2-வது மாடிகளில் இருந்தவர்கள் கீழே ஓடி வந்தனர். அப்போது சந்திரசேகரனும், உமாவும் 10 அடி ஆழ பள்ளத்தில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின், ஒரு ஏணியை கொண்டு வந்து குழிக்குள் இறக்கி சந்திரசேகரனையும், அவரது மனைவியையும் உயிருடன் மீட்டனர். கட்டிடம் பூமிக்குள் புதைந்த அதிர்ச்சியில் சந்திரசேகரன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 14 பேரும் தப்பினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், கட்டிடம் புதைந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பூமியில் கட்டிடம் புதைந்த பகுதியில் கிணறு இருப்பது தெரிய வந்தது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டு 4 ஆண்டுகளே ஆகிறது. கிணற்றை சரியாக மூடாததாலேயே தரைத்தளம் பூமிக்குள் இறங்கியதும் தெரிய வந்தது. கட்டிடத்துக்கு வேறு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தரை தளம் பூமிக்குள் இறங்கிய பகுதியில் உள்ள கிணற்றை மூடும்பணி தற்போது நடந்து வருகிறது. தொடர்ந்து, கட்டிட உரிமையாளரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.