ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி இன மக்களின் உரிமைகளுகாக போராடி வந்த சேசு சபை பாதிரியார் ஸ்டான் சாமி எல்கர் பரிஷத் வழக்கில், கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் மூலம் நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்த நிலையில் அவர் நேற்று (ஜூலை 5) சிறையிலேயே உயிரிழந்தார். 84 வயதான பாதிரியார் ஸ்டான் சாமி சிறையிலேயே மரணம் அடைந்தது சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிரியார் ஸ்டான் சாமி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது அவர் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டபோது மிகவும் தாமதமாகவே தெரியவந்தது. பாதிரியார் ஸ்டான் சாமி, திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள விரகாலூரைச் சேர்ந்தவர் என்பது தமிழ்நாட்டில் பலருக்கும் அவருடைய மரணத்தை மிகவும் நெருக்கமாக உணரவைத்துள்ளது.
மனித உரிமைகள் செயல்பாட்டாளர், எழுத்தாளர் அ.மார்க்ஸ், பாதிரியார் ஸ்டான் சாமி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது, தனது முகநூல் பக்கத்தில் ஸ்டான் சாமியை சந்தித்தது பற்றியும் அவர் ஜார்க்கண்ட்டில் பழங்குடி இன மக்களுக்காக போராடி வருவதையும் குறிப்பிட்டு ஒரு பதிவு எழுதியிருந்தார். அதன்பிறகே, ஸ்டான் சாமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பரவலாக அறியப்பட்டது.
மனித உரிமைகள் செயல்பாட்டாளர், எழுத்தாளர் அ.மார்க்ஸ், பாதிரியார் ஸ்டான் சாமியுடனான சந்திப்பு குறித்தும் இந்த வழக்கில் மத்திய அரசு நடந்துகொண்ட விதம் குறித்தும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துடன் பகிர்ந்துகொண்டார்.
கேள்வி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் மக்களின் உரிமைக்காக போராடி வந்த பாதிரியார் ஸ்டான் சாமி, எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு, அவரை விடுதலை செய்வதற்கோ அல்லது ஜாமினில் விடுவிப்பதற்கோ இந்திய அளவில் ஒரு அழுத்தம் கொடுக்கப்படவில்லையா?
அ.மார்க்ஸ்: இந்த வழக்கில் ஸ்டான் சாமியுடன் கிட்டத்தட்ட 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் இந்திய அளவில் பெரிய அழுத்தம் வரவில்லை என்பது உண்மைதான். ஸ்டான் சாமி இந்த வயதான காலத்தில் பார்க்கின்சன் நோயுடன் (நடுக்குவாதம்) இருக்கும்போதுகூட அவருக்கு பெயில் கொடுக்க மறுத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர் சாப்பிடுகிற உணவை எடுத்து வாயில் வைக்க முடியாத அளவுக்கு இருந்த நிலையில் அவருக்கு உணவு சாப்பிட ஸ்ட்ராகொடுப்பதற்குகூட 20 நாட்கள் ஆகும் என்று நீதிமன்றத்தில் பதில் கொடுத்தார்கள். அது ஓரளவு மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. பிறகு, ஸ்ட்ரா எல்லாம் வாங்கி அனுப்ப ஆரம்பித்தார்கள். அரசாங்கமும் அதை உடனே கொடுத்தார்கள்.
ரோனா வில்சன் என்பவரும் அதே வழக்கில் கைதாகியுள்ளார். இவர்கள் எல்லோருமே எங்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள்தான். அவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு போக வாய்ப்பு இருந்த சமயத்தில் அவரை கைது செய்கிறார்கள்.
அவருடைய லேப்டாப்பில் நரேந்திர மோடியை கொல்வதற்கு திட்டம் போட்டதற்கான சான்றுகள் இருந்தது என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால், இது தொடர்பாக இன்றைக்கு வல்லுனர்கள் என்ன நிரூப்பித்துள்ளார்கள் என்றால், அது வெளியில் இருந்து புகுத்தப்பட்ட வைரஸ் என்றும் அது அவருக்கே தெரியாது என்றும் நிரூபித்துள்ளார்கள். அதை நிரூபித்த பிறகும்கூட அரசாங்கம் அதைப் பற்றி தெளிவான பதில் எதையும் சொல்லவில்லை. அதற்கு யாரோ ஒரு கீழ்மட்ட அதிகாரி அதெல்லாம் ஒன்றுமில்லை என்கிற விதமான பதில்தான் இருந்ததே தவிர, மற்றபடி அது அப்படி இல்லை. நாங்கள் ஒரு வல்லுனர்களிடம் கொடுத்து பரிசோதனை செய்வோம் என்று எதுவும் கூறவில்லை. அவருக்கு பெயிலும் கொடுக்கவில்லை. அவருடைய எதிர்காலமும் போய்விட்டது. இன்றைக்கு வெளிநாட்டில் இருந்திருக்க வேண்டியவர். இவர்கள் எல்லாம் வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்வைப்பவர்கள் கிடையாது.
ஸ்டான் சாமியைப் பொறுத்தமட்டில், நான் 4 ஆண்டுகளுக்கு முன்னாடி சந்தித்தேன். பாஜக ஆட்சிக்கு வந்த உடனே, பெரிய அளவில் முஸ்லிம்கள் மாடுகளைக் கொல்கிறார்கள், கறிகளை விற்கிறார்கள் என்று இந்தியா முழுவதும் கொலைகள் நடந்தது. அந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பகுதிகளில்தான் (ஜார்க்கண்ட்) அதிகமான கொலைகள் நடந்தது. அது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு நாங்கள் ஒரு குழுவாக அங்கே போயிருந்தோம். அங்கே பெரிய அளவில் முஸ்லிம்களும் ஆதிவாசிகளும்தான் கைது செய்யப்படுகிறார்கள்.
அங்கே ஆதிவாசிகள் கைது செய்யப்படுவதற்கு காரணம் என்னவென்றால், இந்தியாவிலேயே அதிகமான கனிம வளங்கள் அங்கே இருக்கிறது. அதை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தாச்சு. அதனால், இவர்களை அவர்கள் இடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய நிலைக்கு வருகிறது. அப்போது அவர்கள் அதை எதிர்த்து போராடுகிறார்கள். அப்போது நாங்கள் அங்கே சென்றிருந்தபோது, நாங்கள் விவரங்களை சேகரிப்பதற்கு தெளிவாக சொல்வதற்கு யாருமில்லை. போலீஸ் கெடுபிடி வேறு இருக்கிறது. அப்போது எல்லோரும் சொன்னார்கள் ஃபாதர் இருக்கிறார் அவரைப் போய் பாருங்கள் என்று சொன்னார்கள். அப்போது அவர் எங்களுக்கு யாரெண்டு எல்லாம் தெரியாது. நாங்கள் நேரில் போய் பார்த்தபோது அவர் தெளிவாக விளக்கினார். அங்கே சராசரியாக தினமும் ஒரு ஆதிவாசி கைது செய்யப்படுகிறார்கள் என்று சொல்லி பட்டியல் எல்லாம் கொடுத்தார். அப்போதுதான், நாங்கள் விசாரித்தபோது அவர் தமிழ்நாட்டுக்கார் என்பது தெரிந்தது.
கேள்வி: நீங்கள் சந்தித்தபோது உங்களுடன் ஸ்டான் சாமி தமிழில் பேசினாரா?
அ.மார்க்ஸ்: நான் அவரிடம் கடைசியாக கேட்டேன். நான் என்னுடைய பிஎஸ்சி டிகிரியை பக்கத்தில் உள்ள சரஸ்வதி கல்லூரியில்தான் படித்தேன். அவருடைய ஊரில் இருந்து ஒரு 20 கி.மீ தூரத்தில்தான் இருக்கும் என்று சொன்னேன். அவர் சிரித்துகொண்டு தமிழில் சொன்னார். அதுவரைக்கும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தவர் தமிழில் இப்போது தமிழ்கூட எனக்கு மறந்துபோச்சு என்று கூறினார்.
ஏனென்றால், அவர் ஊருக்கு அடிக்கடி வந்து போனது எல்லாம் 30 வருஷம் ஆகிவிட்டதாம். அவர்களுக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், அவருக்கே 84 வயது என்றால் யார் இருப்பார்கள் என்பது தெரியவில்லை.
கேள்வி: ஸ்டான் சாமி ஜார்க்கண்ட் சென்ற பிறகு தமிழ்நாடு பற்றிய பார்வை எப்படி இருந்தது?
அ.மார்க்ஸ்: அவருக்கு தமிழ்நாடு பற்றிய பார்வை என்றால், அவர் பழங்குடி மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சென்றார். அப்போது, பழங்குடி மக்கள் எங்கே அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்து அப்படிதான் அவர் ஜார்க்கண்ட் வந்திருக்கிறார். அதனால், அவர் அர்ப்பணிப்புடன் அவர்களுக்காத்தான் வாழ்ந்து வந்தார்.
கேள்வி: ஸ்டான் சாமி ஜார்க்கண்டில் எந்த மாதிரியான பணிகளை செய்து வந்தார் என சொல்லமுடியுமா?
அ.மார்க்ஸ்: குறிப்பாக அங்கே பழங்குடி மக்களுக்கு ஆதரவாக இருப்பது. அவர்களுக்கான அமைப்புகளைக் கட்டுவது. அவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்காக வழக்கு நடத்துவது. அவர்களை பெயில் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்தால் பெயில் எடுப்பது இந்த மாதிரியான வேலைகளை அவர் அங்கே செய்துவந்தார்.
கேள்வி: ஜார்க்கண்டில் இருந்து வந்த பிறகு அவருடன் நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா?
அ.மார்க்ஸ்: இல்லை. அதற்குப் பிறகு நான் அவர்களுடன் தொடர்பை தொடரவில்லை. தொடர்வதற்கான வாய்ப்பு இல்லை. போன வருஷம் அவரை கைது செய்தபோது கண்டனம் தெரிவித்தோம். நான் இப்போது என்.சி.எச்.ஆர்.ஓ என்ற அமைப்பில்தான் இருக்கிறேன். போனவருஷம் என்.சி.எச்.ஆர்.ஓ அமைப்பு சார்பில் முகுந்தன் மேனன் விருது 55,000 ரூபாயுடன் அவருக்கு கொடுத்தோம். ஆனால், அவர் வாங்க வர முடியாது என்பதால் அவர் சார்பாக ஒரு பாதிரியார் வந்து அந்த விருதை வாங்கிக்கொண்டார்கள். அந்த பணத்தை அவர் சிறைக் கைதிகளுக்கு கொடுத்துவிட்டார்.
கேள்வி: ஸ்டான் சாமியின் மரணம் தமிழ்நாட்டில் எப்படியான ஒரு மனநிலையை உருவாக்கி இருக்கிறது.
அ.மார்க்ஸ்: பொதுவாக எல்லோரும் வருத்தப்பட்டு பேசுகிறார்கள். அவர் தமிழர் என்ற செய்தி நிறைய பேருக்கு தெரியவும் தெரியாது. சிறையில் அடைத்து உடல்நிலை மோசமான ஒரு கட்டத்தில்கூட அவருக்கு பெயில் கொடுக்காமல் இப்படி பண்ணிட்டாங்களே என்ற கோபம் உள்ளது. ராஜீவ் காந்தியில் இருந்து எல்லோரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பாஜகவைத் தவிர எல்லோரும் வருத்தமும் கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள்.
கேள்வி: ஸ்டான் சாமியின் மரணம் இந்த வழக்கில் உள்ள மற்றவர்களை விடுவிப்பதற்கான் வாய்ப்பை அல்லது ஜாமினில் விடுவிப்பதற்கான அழுத்தத்தை ஏற்படுத்துமா?
அ.மார்க்ஸ்: அப்படியான இறக்கமுள்ள அரசாக நாங்கள் நரேந்திர மோடி அரசைக் நினைக்கவே இல்லை. இன்றைக்கு இந்தியா முழுவதும் மக்கள் கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள். ஏற்கெனவே இவர்கள் கோவிட்-19ஐ சரியாக கையாளவில்லை என்பதில் மக்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால், கடுமையாக விலைவாசி ஏறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல் விலை ஏறி இருப்பது எல்லோரையுமே பாதித்திருக்கிறது. அதை எல்லோருமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட இவர்கள் பல மடங்கு அதிகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அப்போது கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும்கூட விலையைக் கட்டுப்படுத்தவில்லை என்பது மக்களுக்கு புரிகிறது. இது எதிர்காலத்தில் வருகிற தேர்தலில் பிரதிபலிக்கலாம். கடந்த 5 மாநிலத் தேர்தலிலும் அவர்களுக்கு வெற்றி இல்லை என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் அதை உணரக்கூடிய நபர்களாக இல்லை. அவர்கள் இந்த மாதிரியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவோம் என்கிற மாதிரிதான் அவர்கள் செய்கிறார்கள்.
கேள்வி: எல்கர் பரிஷத் வழக்கில் கவிஞர் வரவர ராவ் போன்றவர்களும் கைதாகியிருக்கிறார்கள் இல்லையா? அதைப் பற்றி கூற முடியுமா?
அ.மார்க்ஸ்: ஆமாம், வரவர ராவ் அவர்களும் கைதாகி இருக்கிறார்கள். அதே போல, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்ப்டே கைதாகி இருக்கிறார். இவர்கள் எல்லோருமே இந்த பீமா கொரேகான் பிரச்னையில்தான் கைதாகிறார்கள். பீமா கொரேகான் கொண்டாட்டதிற்கே போனார்கள் என்றுதான் கைது செய்துள்ளார்கள். ஆனால், அவர் இந்த கொண்டாட்டத்துக்கே போகாதவர் என்பது ஒன்று. இரண்டு அவர் அந்தப் போராட்டத்தை எதிர்த்தார். காரணம் என்ன என்று அவர் விளக்கமாக எழுதிய கட்டுரை இருக்கிறது. அதில் அவர் அந்த போராட்டத்தை தலித் போராட்டமாக நடத்தியது தவறு என்றார். அதற்கு அவர் என்ன காரணம் சொன்னார் என்றால், பார்ப்பன பேஷ்வா அரசுக்கும் தலித்துகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் தலித்துகளின் வெற்றியாக அந்த நினைவுச் சின்னத்தில் கொண்டாட்டத்திற்குப் போகிறார்கள். அந்த நிகழ்வின் 200 ஆண்டு நினைவு விழா அது. 100வது ஆண்டு நினைவு விழாவில் அம்பேத்கர் சென்று அதற்கு மாலை போட்டார். அதனால், 200வது ஆண்டில் நாம் சென்று மாலை போடுவோம் என்று போகிறார்கள். அப்போது அவர்கள், தலித் சமூகம் பற்றி நிறைய எழுதுபவர் என்கிற அடிப்படையிலும் அம்பேத்கருடைய பேரன் என்கிற அடிப்படையிலும் இவரைக் கூப்பிடுகிறார்கள்.
அப்போது ஆனந்த் டெல்டும்ப்டே சொல்கிறார். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதை நாம் தலித்துகளின் வெற்றியாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. காரணம் என்ன வென்றால் அன்றைக்கு இந்த படைகள் பலரிடம் சென்று ஊதியத்திற்காக வேலை செய்வதாக இருந்தது. பிரிட்டிஷ் படைகளில் மாத்திரம் தலித்துகள் இருந்தார்கள் என்று இல்லை. பேஷ்வா படையிலும் தலித்துகள் இருந்தார்கள். அதனால், இப்படியெல்லாம் அவர் எழுதிய கட்டுரை இருக்கிறது. அப்படிப்பட்டவரையே இவர்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள்.
உபா சட்டம் மூலம் ஒருவரைக் காரணம் இல்லாமல் 3 வருஷம் வரைக்கும் சிறையில் வைத்திருக்கலாம். பிறகும்கூட அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 15, 20 வருஷம் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் பட்டியல் எல்லாம் இருக்கிறது. ஏற்கெனவே பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக இருந்தபோது சிபிஎம் குழு ஒன்று சென்று ஒரு பெரிய பட்டியலே கொடுத்தார்கள். அந்தப் பட்டியலில் இருந்தவர்கள் பல வருஷம் சிறையில் இருந்து கடைசியாக அவர்கள் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்படவர்கள். இந்த சட்டம் ஒரு கொடூரமான ஒரு சட்டம். இந்த மாதிரியான சட்டத்துக்கு நம்முடைய அரசியல் அமைப்பில் இடமே கிடையாது. இந்த மாதிரியான சட்டம் இருக்கும்வரை அவர்கள் இன்னும் என்ன வேண்டுமானலும் செய்வார்கள்.
கேள்வி: இறுதியாக ஸ்டான் சாமி பற்றி உங்களுடைய கருத்தைக் கூறுங்கள்?
அ.மார்க்ஸ்: ஸ்டான் சாமி அடிப்படையில் மத நம்பிக்கையுள்ள ஒரு கிறிஸ்துவர். அதனால், அவர் தன்னுடைய மதம் என்று அப்படியெல்லாம் இல்லாமல், ஆதிவாசிகள் மத்தியில் ஒரு வாழ்நாளை முழுவதுமாக செலவிட்டு அவர்களின் விடுதலைக்காக வாழ்ந்தவர். அதற்காக அவர் எந்த ரிஸ்க்கையும் எடுக்கத் தயாராக இருந்தார். அதே போல, சிறைக்கு சென்று இறந்தார். அவர் மிக உண்ணதமான நற்குணங்கள் மிக்க, தியாக குணம் உள்ள, போராட்ட குணமுள்ள, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்ற ஒரு போராளி.” என்று கூறினார்.
ஸ்டான் சாமி, 1975-ம் ஆண்டு முதல் 86ம் ஆண்டு வரை பெங்களூருவில் உள்ள இந்திய சமூகவியல் நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றினார். அதற்குப் பிறகுதான், அவர் பழங்குடியினர் மக்கள் மத்தியில் இறைப்பணி செய்வதற்கு ஜார்க்கண்ட் சென்றார்.
தமிழ்நாட்டில் உள்ள ஸ்டான் சாமியின் உறவினர்கள், ஊடகங்களிடம் பேசுகையில், “அவர் 20 வயதிலேயே எங்கள் இல்லத்தைவிட்டு துறவறம் சென்றுவிட்டார். அதன் பிறகு, அவர் 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் எங்கள் வீட்டுக்கு வருவார். வந்தாலும், அவர் இங்கே 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தது கிடையாது. எங்கள் வீட்டில் நடக்கும் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கும் வந்தது கிடையாது.” என்று கூறினார்.
ஸ்டான் சாமியின் மற்றொரு உறவினர் கூறுகையில், “அவர் சிறையிலேயே அடைக்கப்பட்டு கடைசிவரை ஜாமினில் விடாமல் அவரை வதைத்து அவர் அங்கேயே மரிக்கும்படி இந்த மத்திய சர்க்கார் ஆளாக்கியுள்ளது. அதை நினைத்து நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். ” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.