கதிராமங்கலத்தில் நிலத்தடி நீர் அமிலமாகி வருவதாக ஆய்வுகள் கூறுவதை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் சுட்டிக்காட்டினார். மேலும், சமூக அக்கறையோடு செயல்படுபவர்களை தமிழக அரசு கனிவுடன் பார்க்காமல், மத்திய அரசு சொல்வதையெல்லாம் கேட்பதாக பேராசிரியர் ஜெயராமன் சுட்டிக்காட்டினார்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலந்த்தில் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி, ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் குழாயிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு விளைநிலம் நாசமானது. இதையடுத்து அங்கு மக்கள் போராட்டம் நடத்தினர். இதன்பின், போராட்டக்காரர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியது. மேலும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை காவல் துறை கைது செய்தனர்.
இதையடுத்து, கைதான 10 பேருக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. இதன்பின், பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரும் சனிக்கிழமை திருச்சி மத்திய சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகினர்.
விடுதலையான பின் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன், ”கதிராமங்கலம் நிலத்தடி நீர் அமிலமாகி வருவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலைமையை உருவாக்கிய ஓ.என்.ஜி.சி. நிறுவனமே குற்றவாளி. சமூக அக்கறையுடன் அதனை களத்தில் இறங்கி கேள்வி கேட்கும் நாங்கள் தான் குற்றவாளியா? தமிழக அரசு மத்திய அரசு சொன்னதையெல்லாம் செய்துக் கொண்டிருக்கிறது. சமூக அக்கறையுடன் போராடுபவர்களை தமிழக அரசு கனிவுடன் பார்க்க வேண்டும். வருங்கால சந்தத்தியினரைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. காவிரி படுகை இந்திய வரைபடத்திலிருந்தே காணாமல் போகக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.” என கூறினார்.