டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியை நெல்லையில் நடத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. உள்ளூர் மக்கள் குடிநீருக்கு தவிக்கும்போது, லாரி லாரியாக தாமிரபரணி தண்ணீரை கொண்டு சென்று மைதானத்தை சீரமைக்க விடமாட்டோம் என கூறுகிறது ம.ம.க.!
வருடம் முழுவதும் வற்றாத தாமிரபரணிக் கரையையும் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் விட்டு வைக்கவில்லை. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை நகர் பகுதியிலேயே வாரத்திற்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் நடக்கிறது.
நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் நிலைமை இன்னும் மோசம்! இந்த ஏரியாவில் ராட்சத கல் குவாரிகள் இயங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே போய்விட்டது. எனவே ‘போர்வெல்’கள் முழுமையாக முடங்கிக் கிடக்கின்றன.
தாமிரபரணியில் இருந்து விருதுநகர் மாவட்டம் வரை குடிநீர் கொண்டு செல்லப்பட்டாலும்கூட, நெல்லையை அடுத்துள்ள கிராமங்களில் குடிநீர் வினியோகம் செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் சரியான கட்டமைப்பை உருவாக்கவில்லை. எனவே இங்கு குடிநீருக்காக தினமும் மக்கள் போராடும் சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே அடுத்த வாரத்தில் இருந்து தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சென்னை, திண்டுக்கல், நெல்லை (தாழையூத்து) ஆகிய 3 ஊர்களிலும் நடைபெற இருக்கிறது. இதற்காக நெல்லை தாழையூத்தில் கிரிக்கெட் மைதானத்தை தயார் செய்து வருகிறார்கள். இதற்காக பெருமளவில் தாமிரபரணி தண்ணீர் செலவிடப்படும் என கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் மனிதநேய மக்கள் கட்சி இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஜூலை 16-ம் தேதி தாழையூத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்தக் கட்சியின் மானூர் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். அப்பகுதி பெண்கள் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டம் குறித்து இதில் கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் உஸ்மான்கான் கூறுகையில், “இங்குள்ள மக்கள் சிமெண்ட் ஆலையால் ஏற்கனவே சுற்றுச்சூழல் மாசுபாட்டில் சிக்கித் தவிக்கிறார்கள். அதே நிறுவனத்தின் துணையுடன்தான் டி.என்.பி.எல். போட்டிகளும் நடக்கின்றன. விளையாட்டுக்கு நாங்கள் எதிரி இல்லை. ஆனால் உள்ளூர் மக்கள் தாகத்தில் தவிக்கும்போது, இவர்கள் மைதானத்தை பராமரிக்க வாரக்கணக்கில் தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. தவிர, இங்கு கிரிக்கெட் நடத்தும் நிறுவனத்திற்கு இந்தப் பகுதி மக்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டிய கடமையும் இருக்கிறது. எனவே மக்களின் அடிப்படை தேவையை நிறைவு செய்யாமல் இங்கு கிரிக்கெட் நடத்தவேண்டாம். அதை மீறி நடத்த முய்ன்றல், இங்குள்ள மக்களுடன் இணைந்து மனிதநேய மக்கள் கட்சி தடுத்து நிறுத்தும்!” என்றார் அவர்.
டி.என்.பி.எல். போட்டி ஏற்பாட்டாளர்கள் தரப்பில், ‘நாங்கள் தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்த மாட்டோம்’ என கிராம மக்களுக்கு வாக்குறுதி அளிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அதை சற்றே மாற்றி, தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது என அவர்கள் காட்டவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் மக்கள்!
