ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டனர்.
ஜூலை 17-ம் தேதி இந்திய ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளும் ஆதரிக்கின்றன. காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கு தி.மு.க. ஆதரவு வழங்கியிருக்கிறது.
எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ‘நீட்’டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் கொடுக்கவில்லை. தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய மாநில அரசின் உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
‘நீட்’டில் இருந்து விலக்குபெற மத்திய அரசிடம் போராடி அனுமதி பெறாத அ.தி.மு.க., ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுப்பதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வை கண்டித்து இன்று (ஜூலை 16) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை அந்தக் கட்சியின் துணைத்தலைவரான வழக்கறிஞர் துரைசாமி தலைமையில் சுமார் 50 பேர் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அங்கு தயாராக நின்ற போலீஸ் படை அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றது. மாலையில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பொதுவாக ஆளும்கட்சியின் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறுவது மிக அபூர்வம்! அதுவும் அ.தி.மு.க. அலுவலகம் முன்பு போராட்டம் நடந்ததை அந்த ஏரியாவாசிகள் விசித்திரமாக பார்த்துச் சென்றனர்.