புதுச்சேரியில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகின்ற 9 ஆம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்குகிறது, 13 ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; புதுச்சேரியில் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 9 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்குகிறது.
தொடர்ந்து ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் உறுப்பினர்களின் உரையும் அதனைத் தொடர்ந்து நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். மேலும் புதுச்சேரி அரசுக்கு 10 சதவீதம் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அவர்கள் மீது இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் திட்டங்களை செயல்படுத்த கோப்புகள் அனுப்பினால் அதன் மீது எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து அதனை முடக்கும் வேளையில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
இதனை அதிகாரிகள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும், மேலும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத அதிகாரிகள் மீது சட்டசபை கூட்டத் தொடரிலே தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
என்ன தண்டனை என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதிலளித்த பேரவை தலைவர் செல்வம்… அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யலாம் இல்லையென்றால் சட்ட சபையில் ஒரு நாள் முழுக்க கூட நிக்க வைக்கலாம் என்றும் பதில் அளித்தார்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை, அதிகாரிகள் பணத்தை செலவு செய்ய அரசு உத்தரவு போட்டால் பணத்தை செலவு செய்யாமல் மக்கள் திட்டங்களை முடக்கவே அதிகாரிகள் நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“