பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
இந்திய அஞ்சல் துறை சார்பில் அக்கார்டு ஓட்டலில் கைவினைஞர்கள், ஏற்றுமதியாளர்களுக்கான அஞ்சலகம் குறித்த அறிமுக கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் பேசுகையில்,
புதுவையில் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கான 2 மணி நேர சலுகை திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கடுமையாக உழைக்கும் பெண்களுக்கு புதுவை அரசு அளிக்கும் ஒரு சின்ன பரிசு. பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பெண்கள் இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தை பல பேர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் ஒருபோதும் இந்த திட்டத்தை திரும்ப பெற முடியாது.
பெண் அடிமைத்தனம் என கூறுகின்றனர். இவர்கள் எதை பெண்ணுரிமை என சொல்கிறார்கள்? எதை செய்தாலும் எதிர்க்க வேண்டும் என நினைத்து செயல்படுகின்றனர். ஜிப்மர் மருத்துவமனை புதுவை மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு முழு சேவையை ஆற்றி வருகிறது. பல்வேறு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் பெறக்கூடிய உயர்சிகிச்சையை ஜிப்மர் அளித்து வருகிறது.

தமிழகத்திலிருந்து 70 சதவீத மக்கள் ஜிப்மரில் சேவையை பெறுகினற்னர். ஜிப்மரில் குறைசொல்ல முடியாத அளவுக்கு டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். 60 சதவீத பரிசோதனைகள் இங்கு செய்யப்படுகிறது. மும்பை சென்னை பெங்களூர் செல்லக்கூடிய பரிசோதனைகள் ஜிப்மரில் செய்யப்படுகிறது. இதையெல்லாம் பாராட்ட மாட்டார்கள். வேறு யாரும் பாராட்ட தேவையில்லை.
ஏழை மக்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது என்பது பொய்யான செய்தி. இருப்பினும் ஜிப்மரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வது, நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விழுப்புரம் எம்பிக்கு புதுவையில் என்ன வேலை? இவர்களுக்கு விளம்பரம் தேவை என்றால் தமிழ்நாட்டோடு வைத்துக் கொள்ளட்டும். அவர்கள் தொகுதியில் சென்று பணி செய்யட்டும். புதுவைக்கு தேவையில்லை. போராட்டம் நடத்தும் அளவிற்கு ஜிப்மர் செயல்படவில்லை. ஜிப்மர் நன்றாகவே செயல்படுகிறது.

ஜிப்மரில் ஏழை எளிய மக்களிடம் சிகிச்சைக்காக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். அது எந்த விதத்திலும் உண்மையல்ல. அப்படி ஏழை எளிய மக்களிடம் கட்டணத்தை ஜிப்மர் வசூலித்து இருந்தால் அந்த கட்டணத்தை நானே திருப்பித்தர சொல்கிறேன். ஜிப்மரின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். குறை இருந்தால் சொல்லட்டும், அதை சரிசெய்யலாம். ஜிப்மரில் பல கோடியில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“