புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை இன்று நடைப்பயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
புதுக்சேரியில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருப்பது மணக்குள விநாயகர் கோவில். இந்த கோவிலில் 1997-ம் ஆண்டு முதல் லட்சுமி என்ற யானை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. 5 வயதில் இருந்து இதே கோவிலில் இருந்த இந்த யானையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் தரிசித்து செல்வது வழக்கம்.
இதனிடையே தமிழகத்தில் உள்ள கோவில் யானைகளுக்கு ஆண்டுதோறும் 48 நாட்கள் புத்தூயிர் முகாம் நடத்துவது வழக்கம். இந்த முகாமில் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியும் பங்கேற்று வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக யானை புத்துயிர் முகாம் நிறுத்தப்பட்டது.
Advertisment
Advertisements
இதனால் கடந்த 2 வருடங்களாக வனத்துறையின் அறிவுறுத்தலின்படி யானை லட்சுமிக்கு அது தங்கியுள்ள வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள கொட்டலில் 15 நாட்கள் ஓய்வெடுக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதனிடையே இன்று யானை லட்சுமி தனது இருப்பிடத்தில் இருந்து நடைபயணம் சென்ற நிலையில், கல்வே கல்லுரி அருகே திடீரென மயங்கி விழுந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவ குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் அங்கு வந்த மருத்துவர் யானையை பரிசோதனை செய்ததில் யானை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், யானை லட்சுமியின் உடல் பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு யானை வாங்க வேண்டும் என்று 1996 புதுச்சேரி முதலமைச்சரிடம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வைத்தியநாதன் முதலியார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அப்போதைய முதலமைச்சர் ஜானகிராமன் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்தமனுவை பரிசீலித்த முதலமைச்சர் ஜானகிராமன், வைத்தியநாதன் முதலியார் தலைமையில் காலாப்பட்டு கேம்பக் தனியார் தொழிற்சாலையிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ராவ் முதலமைச்சரின் ஆணைக்கு இணங்க கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இந்த யானை வாங்கப்பட்டு 30.10.1997 அன்று மணக்குள விநாயகர் கோவிலில் ஒப்படைத்தனர். அன்று முதல் லட்சுமி என்ற பெயரில் 25 வருடங்கள் மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து வந்த யானை தற்போது உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.