புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பாண்ட், சர்ட் அணிந்து சைக்கிளில் சென்று நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்து தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் தமிழக அரசு மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு முழுமையாக வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கை அமல்படுத்துவதை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அந்த மாவட்டத்தில் முழு ஊரடங்கு எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை புதுக்கோட்டை நகரத்தின் முக்கிய பகுதிகளில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்தார். முகக்கவசம் அணியாமல், தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களைக் கண்டித்து அறிவுரை கூறி அவர்களுக்கு முகக் கவசம் அளித்தார். ஆட்சியர் கவிதா ராமு பாண்ட் சர்ட் அணிந்து சைக்கிளில் வந்து முழு ஊரடங்கை கண்காணித்து ஆய்வு செய்தது காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளை திகைக்க வைத்தது. கலெக்டரே சைக்கிளில் வந்து முழு ஊரடங்கை ஆய்வு செய்ததை தொலைக்காட்சிகளில் பார்த்த புதுக்கோட்டை மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களே இப்படியும் ஒரு கலெக்டரா என்று வியந்துபோனார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் கவிதா ராமு ஐஏஎஸ், அனைத்து தரப்பு மக்களும் அவரை எளிதில் அணுகி தங்கள் கோரிக்கைகளை வைக்கிற அளவுக்கு மிகவும் எளிமையானவர் என்கிறார்கள் புதுக்கோட்டை மக்கள்.
கவிதா ராமுவின் தந்தை ராமு ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. தந்தையின் வழியில் இந்திய குடிமைப் பணி தேர்வு எழுதி ஐஏஸ் அதிகாரியானார். 2014ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கவிதா ராமு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக வருவதற்கு முன்பு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சித் திட்டத்தின் இயக்குனராக இருந்து அந்த துறையில் சிறப்பாக செயல்பட்டார். கவிதா ராமு ஐஏஎஸ் அதிகாரி மட்டுமல்ல அவர் ஒரு பரத நாட்டியக் கலைஞரும்கூட. முற்போக்கான சிந்தனை செயல் உடையவராக அறியப்படும் கவிதா ராமு சமூக ஊடகங்களில் முக்கியமான விஷயங்களில் தனது கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதுமே மாணவர் விடுதிகள், சிறார் மற்றும் முதியோர் இல்லங்கள் என எல்லாவற்றையும் அதிரடியாக ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி, பிசி என அனைத்து மாணவர் விடுதிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். மோசமான நிலையில் இருந்த சில விடுதிகளை இனிமேல் இப்படி இருக்கக்கூடாது. மாணவர்கள் தங்கி படிக்கும் அரசு மாணவர் விடுதிகள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்தார். அதே போல, சிறுவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களை அதிரடியாக ஆய்வு செய்து அனுமதி இல்லாமல் செயல்பட்ட 2 முதியோர் இல்லங்களுக்கு சீல் வைத்தார்.
புதுக்கோட்டையில் ஒரு நாளைக்கு அமைச்சர்கள் பங்கேற்கும் 3 – 4 நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நேரத்தை வீணாக்க முடியாது. ஒரு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்பேன் மற்ற நிகழ்ச்சிகளில் டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று ஆரம்பத்திலேயே திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் படிக்கும் மாணவர்கள் எந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றாலும் ஆட்சியர் கவிதா ராமு அந்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி மாணவர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படி அண்மையில், பாட்டுப் போட்டியில் மாநில அளவில் புதுக்கோட்டை மாணாவர் ஒருவர் 2ம் இடத்தைப் பிடித்தார். அந்த மாணவரை நேரில் அழைத்துப் பாராட்டிய கவிதா ராமு, அந்த மாணவர் போட்டியில் பாடிய ‘ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தைப் போல…’ பாடலை பாட வைத்து அவரைப் பாராட்டினார்.
கடந்த மாதம், திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன், வழிபடுவதை தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அதில், “இஸ்லாமியர் என்பதால் இந்து கடவுளை வணங்கக்கூடாது என எதுவும் கிடையாது; யாருக்கெல்லாம் நம்பிக்கை உள்ளதோ, அவர்கள் அனைவரும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். ஜாகிர் அண்ணன் வைணவ சமயத்தின்மீது அதிக ஈடுபாடு கொண்டவர்” என்றும் அவர் ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபடுவதை தடுத்து நிறுத்திய சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும் பதிவிட்டார். இந்த சம்பவத்துக்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தபோது கவிதா ராமு நன்றி தெரிவித்தார்.
மிகவும் முற்போக்கானவராக அறியப்படும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, அந்த மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்று தனது பணியைத் தொடர்கிறார். ஆட்சியர் கவிதா ராமுவின் செயல்பாட்டால் புழுக்கமடையும் சிலர் முதலமைச்சரிடம் இவரைப் பற்றி தவறான தகவல்களையும் கூறிவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தனது புதுமையான அணுகுமுறைகளால் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.
இந்த நிலையில்தான், கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது பாண்ட் சர்ட் அணிந்து சைக்கிளில் சென்று புதுக்கோட்டை நகரத்தின் முக்கிய பகுதிகளில் முழு ஊரடங்கை கண்காணித்து தமிழக மக்களையே இப்படி ஒரு கலெக்டரா என்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். சுமார் 45 நிமிடங்கள் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் கவிதா ராமு, முகக் கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தவர்களை கண்டித்து அவர்களுக்கு முகக் கவசம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பினார். கவிதா ராமு தனது சுற்றுப்பயணத்தின் போது நகரில் மருந்து கடைகளைத் (Medical Shops) தவிர வேறு எந்த கடைகளும் திறக்கப்படவில்லை என்று ஊடகங்களிடம் கூறினார். கலெக்டர் சைக்கிளில் சென்று முழு ஊரடங்கை கண்காணித்ததன் மூலம் கவிதா ராமு தமிழக மக்களை இப்படி ஒரு எளிமையான கலெக்டரா என்று திரும்பி பார்க்க வைத்துள்ளார். புதுக்கோட்டை மக்கள் கொடுத்து வைத்தவர்கள் மற்ற மாவட்ட மக்களும் பேசும் விதமாக புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“