நாடு முழுவதும், போலியோ நோய் வராமல் தடுப்பதற்காக சொட்டு மருந்து அளிக்கும் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிப்பதற்காக, போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படு வருகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இரண்டு தவணைகளாக இந்த போலியோ சொட்டு மருந்துந்தானது கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதற்கட்ட போலீயோ முகாம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது இரண்டாவது கட்ட முகாம் இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 43,051 சொட்டுமருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1,000 நடமாடும் சொட்டு மருந்து மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே பெற்றோர்கள் தங்கள் குழுந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 7-மணி முதல் மாலை 5-மணி வரை இந்த மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவள்ளூரில் போலியோ சொட்டு மருந்துமுகாமை தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறிதாவது: தமிழகத்தில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்காரணமாக, தமிழகமானது 13-வது ஆண்டாக தொடர்ந்து போலியோ இல்லாத நிலையை எட்டியுள்ளது. தற்போது, தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.