சிவாஜி சிலை பீடத்தில் நீக்கப்பட்ட கருணாநிதி பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும் என நடிகர் சங்கப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க அவசர பொதுக்குழு அக்டோபர் 8-ம் தேதி (ஞாயிறு) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. வழக்கம்போல ரஜினி,கமல், அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். செயலாளர் விஷால் முன்னிலை வகித்தார். சினிமாக்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை ரத்து செய்வது பற்றி ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பேசுகையில், ‘சினிமா துறை சார்ந்த பல சங்கங்களில் நான் பொறுப்பு வகித்திருக்கிறேன். தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளேன்.
ஆனால் ஜி.எஸ்.டி, கேளிக்கைவரி உள்ளிட்ட சினிமாதுறை சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக அரசிடம் பேச சங்க நிர்வாகிகள் செல்லும் போது என்னை அழைக்காதது ஏன்? இனி வரும் காலங்களில் இது போன்ற குறைகளை நிவர்த்தி செய்து சினிமா துறை சார்ந்த பிரச்சனைகளில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
கருணாசின் இந்த திடீர் பேச்சால் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுவில் சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், ‘கேளிக்கை வரியை எங்களால் கட்ட முடியாது. சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டியதற்கு நன்றி. ஆனால் கேளிக்கை வரி மூலமாக சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டிவிட வேண்டாம். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான அடுத்த தேர்தல் 2018ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறும்.
சிவாஜி சிலை பீடத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதி பெயரை மீண்டும் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கேளிக்கை வரி பற்றி பேசுவதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் அக்டோபர் 10ல் (செவ்வாய் கிழமை) முதல் அமைச்சரை சந்திக்க உள்ளனர்’ என்றார்.
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டு கணக்கு வெளியிடப்பட்டது. அதில் மூலதன கணக்கு ரூ1.06 கோடி,ரொக்க கையிருப்பு ரூ.1.09 லட்சம், வங்கியிருப்பு ரூ.18.31 லட்சம், நிலையான சொத்துக்கள் ரூ.1.46 லட்சம், நடைமுறை சொத்துக்கள் ரூ.34.91 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ‘அடுத்த டிசம்பருக்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் கட்டப்படும். கேளிக்கை வரியை ரத்து செய்ய அரசு தரப்பில் இருந்து கருணாஸ் முயற்சி எடுக்க வேண்டும். எங்களது செய்லபாடுகளில் எந்த ஒரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது, நல்லதை மட்டுமே காணமுடியும், நாங்கள் கொடுத்த வாக்குறுதியிலும் விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை’ என்று கூறினார்.
ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாக நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறினார். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த ரஜினி, கமலிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும் அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.