விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியதாக கூறி 100 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/06-k-krishnasamy-10-1499661010-300x217.jpg)
விஜய் தொலைக்கட்சியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இந்நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக கூறி, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் புகார் தெரிவித்து, நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என அர்ஜூன் சம்பத், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும், அக்கட்சியினர் நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், அதில் ஒரு போட்டியாளரான நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்; என பேசியது போல் காண்பிக்கப்பட்டது.
இது, தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக சித்தரிப்பது போல் உள்ளது என பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால், காயத்ரி ரகுராம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியதாக கூறி 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ என கூறியதற்கு நடிகர் கமல்ஹாசனும், காயத்ரி ரகுராமனும் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக்கூறியும் அவர்கள் மன்னிப்பு கேட்காத நிலையில், 100 கோடி ரூபாய் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் எனவும் கிருஷ்ணசாமி கூறினார்.