மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய சில தகவல்களை இன்று வெளியிட்டுள்ளது. ’ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட 'அதிகாரப்பூர்வ ரிப்போர்ட்’ (Patient care report) புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியின் களப்பணியின்போது கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள சிகிச்சை தொடர்பான முக்கிய ரிப்போர்ட் நகலின் விவரங்கள் வருமாறு...
''2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.00-க்கு போயஸ் கார்டனிலிருந்து 'ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை' என்று தொலைபேசி அழைப்பு வந்ததும், அப்போலோ மருத்துவமனையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு, 10:01-க்கு கிளம்பி, 10:06-க்கு போயஸ் கார்டன் சென்றுள்ளது. முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா, மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். அவரைத் தட்டி எழுப்பியபோது, எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவு மட்டுமே இருந்துள்ளது. பின்னர், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது நடத்திய சோதனையில் சராசரியாக 120/80 ஆக இருக்கவேண்டிய ரத்த அழுத்தம், 140/70 ஆக ஜெயலலிதாவிற்கு அதிகரித்திருக்கிறது. 120 எம்.ஜி-யாக இருக்க வேண்டிய சர்க்கரை அளவும் 508 எம்.ஜி என்ற அபாய நிலையில் இருந்துள்ளது. அதேபோல், நிமிடத்திற்கு சராசரியாக 72 என இருக்க வேண்டிய இதயத் துடிப்பானது 80-ஆக இருந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாள்கள் முன்னதாகவே, ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆக்சிஜன் அளவு 100 சதவிகிதம் இருப்பதற்குப் பதிலாக 45 சதவிகிதம் மட்டுமே இருந்திருக்கிறது'' என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று இரவில் அவரது இல்லத்தில் நடந்தவை என பல்வேறு யூகங்கள் வெளிவந்த நிலையில், ஜெயலலிதா உடலில் காயமோ, புண்களோ இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் ஆம்புலன்ஸுடன் செல்வது வழக்கம். அப்படி இருக்கும்போது, அவருக்கு உடல்நிலை மோசமடைந்தபோது, போயஸ் இல்லத்தில் ஆம்புலன்ஸ் இல்லாதது ஏன்? ஒரு மாநில முதல்வரின் உடலில் சர்க்கரையின் அளவு அபாய கட்டத்தை தொடும் அளவிற்கு உயர்ந்த போதும், அதை உடனே கண்டறிந்து தகுந்த சிகிச்சை வழங்கப்படாதது ஏன்? என பல கேள்விகள் எழுகின்றன.