Devendrar caste demands G.O in Twitter trending: பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள தேவேந்திரகுலத்தார் உள்ளிட்ட 6 சாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைப்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிடாதது ஏன் என்று டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பியதால் ட்ரெண்ட் ஆனது.
தமிழகத்தில் பட்டியல் சாதிகளில் ஒரு பிரிவினரை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும். அவர்களை பட்டியல் சாதிகள் பிரிவில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றவேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வசிப்பவர்கள் பட்டியல் சாதிகளில் ஒரு பிரிவினரான தேவேந்திர குல வேளாளர்கள். குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார்,பள்ளர், ஆஇய 6 பிரிவு சாதிகளை ஒன்றாக இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் மற்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்த சில அரசியல் இயக்கங்கள் கோரி வருகின்றனர். மேலும், இந்த சாதியினரை பட்டியல் சாதிகள் பிரிவில் இருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இந்த பட்டியல் சாதி வெளியேற்றத்திற்கு அந்த சமூகத்திலேயே சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூட்டணி ஒப்பந்தத்தின்போது முக்கிய கோரிக்கையாக தங்களை தேவேந்திரர்கள் என்று அழைக்க வேண்டும். பட்டியல் சாதிகளில் இருந்து தேவேந்திரர்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார். கூட்டணிக்குப் பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டார்.
#தேவேந்திரகுல_வேளாளர்_அரசானை எங்க???
— கருப்பசாமி (@KaruppuPT) September 25, 2019
தமிழக அரசு இந்த குழு அமைத்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிடுவதில் ஏன் இன்னும் தாமதம் என்று புதிய தமிழகம் கட்சியினர் மற்றும் தேவேந்திரர்கள் பிரிவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது டுவிட்டரிலும் ட்ரெண்ட் ஆனது.
இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால், நாளை காலையே தேவேந்திரகுல வேளாளர் பிரிவை பட்டியல் பிரிவிலிருந்து அரசாணையை வெளிய்ட முடியும் என்று தெரிவித்திருந்தார்.
தேர்தல் வந்தால் தேவேந்திர குல வேளாளர் மக்களின் ஆதரவு மட்டும் வேண்டும், ஆனால் ஆட்சி இருந்தும் கோரிக்கையை நிறைவேற்ற மனமில்லை?!
அதிமுக அரசு மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். #தேவேந்திரகுல_வேளாளர்_அரசானை— Shyam Krishnasamy (@DrShyamKK) September 25, 2019
இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் ஷியாம் கூறுகையில், தேர்தல் கூட்டணியின் போது, தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பது எங்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. ஆனால், தேர்தல் முடிந்து இடைத் தேர்தல் வந்துவிட்டது, உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது இன்னும் எங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வில்லை. தமிழக அரசு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது. தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழு அமைத்ததோடு அதை கிடப்பில்போட்டுவிட்டது அதை தொடர்ந்து பின்பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு அரசாணை வெளியிடுவதில் என்ன தயக்கம்? விரைவில் எங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும்விதமாக ட்ரெண்ட் ஆகியுள்ளது” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.