தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் சேரனுக்கு, ராதிகா சரத்குமார் மற்றும் ராதாரவி இருவரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுகிறார். இதை எதிர்த்து, நேற்று முதல் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் சேரன். “ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவது, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் செயலாக உள்ளது. எதிர்காலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தயாரிப்பாளர்களுக்கும், சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்காத சூழ்நிலையை உருவாக்கும்.
இதனால் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த திரையுலகமே முடங்கும் அபாயம் ஏற்படும். எனவே, தயாரிப்பாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், விஷாலின் இயலாமையைக் கருத்தில் கொண்டும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஷால் தேர்தலில் போட்டியிடட்டும்” என சேரன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது நாளாகத் தொடரும் இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு பாதுகாப்பு கேட்டு, ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் சேரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ராதாரவி இருவரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, “அரசியல் கஷ்டம் தம்பி. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நல்லது பண்ணு” என விஷாலுக்கு அறிவுரை கூறினார். அத்துடன், “விஷால் குளத்து ஆமை மாதிரி. நல்ல இடமாக இருந்தால், அங்கு சென்று அதைக் கெடுத்து விடுவார். நான் எதிர்க்கும் அளவிற்கு விஷால் ஒன்றும் பெரிய ஆள் இல்லை” எனத் தெரிவித்தார்.