கன்னியாகுமரி ஓகி புயல் பாதிப்பு குறித்து சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை இன்று நேரில் வந்து பார்த்தார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியான சின்னத்துறை என்ற கிராமத்தில் மீனவ மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:
மீனவ மக்களிடம், ‘வணக்கம்’ என கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார் ராகுல் காந்தி. அதை திருநாவுக்கரசர் தமிழில் மொழி பெயர்த்தார். ‘குஜராத் தேர்தல் காரணமாக சற்று முன்னதாக வர முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும். இது பெரிய சோகம். மீனவர்களும் விவசாயிகளும் பெரும் இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள்.
தந்தை, சகோதரர் என உறவினர்களை இழந்த தாய்மார்களை சந்தித்து பேசினேன். எந்தெந்த விதத்தில் உங்களுக்கு உதவ முடியுமோ, அந்த விதங்களில் உதவ முயற்சிப்பேன். காங்கிரஸ் இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இல்லை. எதிர்க்கட்சி என்ற முறையில் அழுத்தமாக உங்களுக்கு குரல் கொடுப்போம்.
பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இதை பேசுவோம். விவசாயிகளுக்கு தனி அமைச்சர் இருப்பதைப் போல, மீனவர்களுக்கு தனி அமைச்சர் தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை. இந்தத் தருணத்தில் மீனவர்களுக்கு தனி அமைச்சர் இருந்திருந்தால், அவர் குரல் எழுப்பியிருப்பார். இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
மீனவர்களுக்கு மட்டுமல்லாமல், விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் உதவி செய்வோம்’ . இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் ஆனபிறகு முதல் முறையாக தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களும் பெருமளவில் அங்கு திரண்டனர். ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.