கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்தார். தரையில் அமர்ந்து துயரங்களை விசாரித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை கடந்த 30-ம் தேதி ஓகி புயல் தாக்கியது. அதில் விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதுடன், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 462 மீனவர்கள் மீட்கப்படவில்லை என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் துயரத்திற்கு பல்வேறு கட்சியினரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்வு பெற்ற ராகுல் காந்தி இன்று (டிசம்பர் 14) திருவனந்தபுரம் வந்தார். அங்கு ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் இன்று பிற்பகலில் வந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியான சின்னத்துறை மீனவர் கிராமத்திற்கு வந்த ராகுல் காந்தி, அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை சந்தித்தார். அந்த மக்களுடன் தரையில் அமர்ந்து ராகுல் காந்தி பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், திமுக எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் அப்போது ராகுலுடன் இருந்தனர்.
ஓகி புயலில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் மிகவும் உருக்கமாக ராகுல் பேசினார். அவரது பேச்சை திருநாவுக்கரசர் மிழி பெயர்த்து கூறினார். மீனவ மக்கள் கூறியதையும் ராகுலுக்கு மொழி பெயர்த்து கூறினார் அவர்.
காங்கிரஸ் தலைவராக தேர்வு பெற்ற பிறகு ராகுல் காந்தியின் முதல் தமிழக விசிட் இது என்பதால், திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பூந்துறையிலும் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ராகுல் ஆறுதல் கூறினார்.