முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். இவர், தனது மகன் கார்த்தியுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை சிபிஐ அதிகாரிகள் 9 பேர் சிதம்பரம் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன் கார்த்திக் ப.சிதம்பரம் வீட்டிலும் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.
ஏன் இந்த ரெய்டு?
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்குவதில், முறைகேடு நடந்ததாக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அனுமதி கொடுப்பதற்கு ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பல லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து, அவர் மீதும், இந்திராணி, பீட்டர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையிலேயே, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் தற்போது சிபிஐ சோதனை நடத்திவருகிறது.
சிதம்பரம் சொல்வது என்ன?
சிபிஐ-ன் இந்த ரெய்டு குறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. என் மீது குற்றச்சாட்டு சுமத்தப்படும் இந்த வழக்கில், அந்நிய முதலீட்டிற்கு 5 செயலாளர்கள் தான் கையெழுத்திட்டு அனுமதி அளித்தார்கள். இதற்காக என் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? அந்த ஐந்து செயலாளர்கள் மீது ஏன் குற்றச்சாட்டோ, நடவடிக்கையோ இல்லை? சட்டதிட்டத்திற்கு உட்பட்டுதான் இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் எனக்கு நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. மத்திய அரசு, சிபிஐயினை தவறாக வழி நடத்துகிறது. அதைப்பயன்படுத்தி தான் என் மீதும், என மகன் மற்றும் அவரின் நண்பர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தப் பிரச்னையை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன்" என்றார்.
ஆனால், உரிய ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என சிபிஐ தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சிபிஐ தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.