/tamil-ie/media/media_files/uploads/2017/08/Chennai-rains.jpg)
Tamilnadu Weather Today
தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் இன்று வட கடலோர மாவட்டங்களில் மழை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த 10-ம் தேதி முதல் 2-வது கட்டமாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதே இதற்கு காரணம்!
வட மாவட்டங்களில் மழை பெய்து வருவதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. நேற்று மாலை 6 மணி முதல் இந்த மாவட்டங்களில் பரவலாக கனமழை இருந்தது. இரவிலும் தொடர்ந்த மழை, இன்று காலை முதல் தூறலாக இருந்து வருகிறது.
சென்னையில் சேப்பாக்கம், தி.நகர் உள்பட பெரும்பாலான பகுதிகளில் காலையில் மெல்லிய தூறல் இருந்தது. காலை 10 மணிக்கு மேல் மேகமூட்டமான நிலை நிலவுகிறது. இந்தச் சூழலில் இன்று பகல் 12 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
Chennai Rain update - Interesting day awaits us. Rains are expected in the morning / daytime too with breaks.... https://t.co/3n4VxaIvgK
— TamilNadu Weatherman (@praddy06) November 13, 2017
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பெய்திருக்கிறது. நவம்பர் 10-ம் தேதி முதல் தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை சற்றே வலுப்பெற்று அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் இன்று தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுவை ஆகிய பகுதிகளில் மிதமான மழை இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும்.
தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை முதல் வடக்கு நோக்கி நகரும் வாய்ப்பு இருக்கிறது. எனவே நாளை முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.