பெரும் எதிர்பார்ப்புடன் நடந்துகொண்டிருந்த தி.மு.க. பவழவிழா பொதுக்கூட்டம், பலத்த மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலிக்கு வயது 75. இதையொட்டி அதன் பவழவிழாவை ஆகஸ்ட் 10, 11-ம் தேதிகளில் நடத்த தி.மு.க. முடிவு செய்தது. அதன்படி முதல்நாளான நேற்று (10-ம் தேதி) பத்திரிகை அதிபர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது.
2-ம் நாளான இன்று (11-ம் தேதி) மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாநிலம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் லட்சக்கணக்கில் சென்னையில் திரண்டனர். இன்று காலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய ஸ்டாலின், மாலையில் விழாவை வெற்றிபெறச் செய்யவேண்டும் என நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
திரண்ட தொண்டர்கள்
மாலையில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் விழா தொடங்கியது. முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்றுப் பேசினார். திராவிட இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஸ்டாலின் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். அப்போதே சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டத் தொடங்கியது.
பிறகு கொட்டும் மழைக்கு இடையே குடை பிடித்துக்கொண்டு முரசொலி பவழவிழா மலரை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். அதனை முரசொலியின் முதல் மேலாளர் தட்சிணாமூர்த்தி பெற்றுக்கொண்டார். நல்லகண்ணு பேசுகையில், முரசொலியின் சேவை இன்னும் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாக கூறினார்.
அடுத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், மழை வலுத்தது. எனவே மேடையில் தலைவர்களால் உட்கார முடியவில்லை. மைதானம் முழுவதும் திரண்ட தொண்டர்களும் தொப்பல் தொப்பலாக நனைந்தனர். எனவே மைக் முன்பு வந்த ஸ்டாலின், ‘மழை காரணமாக நிகழ்ச்சியை ஒத்தி வைக்கிறோம். இன்னொரு நாளில் பிரமாண்டமாக இந்தக் கூட்டத்தை நடத்துவோம்’ என அறிவித்தார்.
இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 20-க்கும் மேற்பட்ட இதர கட்சிகளின் தலைவர்கள் பேச இயலவில்லை. மாநிலம் முழுவதும் இருந்து வந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். ஏற்கனவே நேற்றும், இன்றும் அ.தி.மு.க. அணிகளின் மோதல் விவகாரமே ‘டாப் டாபிக்’காக மாறியிருந்ததில், தி.மு.க. தரப்புக்கு வருத்தம்! இந்நிலையில் விழாவையும் பாதியில் முடிக்க நேர்ந்தது அதிர்ச்சிதான்!