வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னைக்கு புயல் ஆபத்து இல்லை. ஆனால் மழை வரும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறினார்.
வங்கக் கடலின் தென்கிழக்கு திசையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டிருக்கிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ம் தேதிவாக்கில் கடலூர், சிதம்பரம் பகுதியில் புயலாக தாக்கும் வாய்ப்பு இருப்பதாக முதலில் கணிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டதை ஓகி புயல் தாக்கியதை அடுத்து, இதுவும் அதேபோல இருக்குமோ? என்கிற பீதி நிலவியது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவரான அமைச்சர் எம்.சி.சம்பத், ‘4, 5-ம் தேதிகளில் கடலூர் மாவட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என எச்சரிக்கை செய்திருந்தார். வட மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு துறை, சென்னை வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வளத்துறை ஆகியன எச்சரிக்கை செய்தன. இதையொட்டி தண்டோரா மூலமாக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வு எதிர்பார்த்ததைவிட மெதுவாகவே இருக்கிறது. வட தமிழகத்திற்கும், தெற்கு ஆந்திராவுக்கும் இடையே அது கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று கூறியது. இந்த நிலையில் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் இன்று அதிகாலையில் இது தொடர்பான தனது கணிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ‘பலரும் கணித்ததைப் போல புயலுக்கு வாய்ப்பில்லை. காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை வரும். ஆனால் வெள்ளப் பெருக்கு அளவுக்கு இருக்காது. எனவே சென்னை மக்கள் கவலைப்பட வேண்டாம்.’ என கூறியிருக்கிறார் பிரதீப் ஜான்.