நுங்கம்பாக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியின் போது, "ஆந்திர கடற்கரையோரங்களில், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாறு, அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று, தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை தொடர்ந்து பெய்துவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது" என்றார்.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ஃபேஸ்புக்கில் பிரபலமான தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம் வடக்குப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் என்றும், மதுரை - சிவகங்கை - புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும்" என்றும் கூறியுள்ளார்.
மேலும், "சென்னையில் இன்று இரவு அல்லது விடியற்காலை மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், ஆந்திரா அருகே உருவாகியுள்ள, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நேரடியாக நமக்கு மழை கிடைக்காது. வெப்பச்சலனம் காரணமாகவே மழை பெய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார்.