தமிழகத்தில் மழை அளவு குறையும். ஆனால், மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளதாவது: மாநிலத்தின் சில பகுதிகளில் மழை நின்று இருக்கலாம். ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையானது, கடந்த சில நாட்களில் பெய்த அளவை விட குறைவான அளவில் தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மேற்கு பருவமழை காலத்தில் இன்று வரை 35 சதவீத அதிகப்படியான மழை தமிழகத்தில் பெய்துள்ளது. தூத்துக்குடி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாதாரணமாக குறைவான அளவே இருக்கும். தென்மேற்கு பருவமழை காலம் முழுவதும் தார் பாலைவனத்தை விட மோசமான வறட்சியே இங்கு நிலவும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்தது போன்ற மழையை நான் இதுவரை பார்த்ததில்லை. மேலும், மழை அளவு சிறிதளவு குறையுமே தவிர, தொடரும்.
மலைப் பகுதிகளில் நேற்றைய தினம் முதல் மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு அது தொடரும். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். முல்லை பெரியார், டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.
பொள்ளாச்சி மாலைப் பகுதிகளில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பழனியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தை பொறுத்தவரை இன்று மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையை விட குறைவாகவே பெய்யும். நேற்றைய மழை அளவை நான் மிகைப்படுத்தி கூறி விட்டேன் என சிலர் கூறுகின்றனர். ஆனால், இன்று காலை 8.30 மணிவரை பதிவான மழை அளவை பார்த்தால் அது புரியும். குறிப்பாக, வட சென்னை, ரெட்ஹில்ஸ் பகுதிகளில் கனமழை பெய்தது என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், சென்னையில் இன்று இரவும், நேற்றிரவு போன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், மழை அளவு எவ்வளவு பதிவாகும் என்பது கேள்விக் குறியே எனவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை வெள்ளத்தின் பொழுது மழை வருவது குறித்து செய்திகளை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்தவர் பிரதீப் ஜான். முகநூலில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பக்கத்தை நடத்தி வரும் இவர், தன் தெளிவான வானிலை விளக்கங்களால் பிரபலமானவர்.