ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக சென்னையில் ஒருவரை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக உளவுத்துறைக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும் அவர்கள் பலரை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தில் சிலர் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை வந்த ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், சென்னை முத்தையால் பெட்டியில் வசித்து வந்த ஆரூண் என்பவரை கைது செய்தனர். இவர் பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்ட ஆரூண் ராஜஸ்தான் கொண்டு செல்லப்படுவார் என தெரிகிறது.
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் இருந்து நிதி மற்றும் ஆட்களை திரட்டியதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.