திமுக "முரசொலி" பவள விழா: விருந்தினராக கமல்! ஆனால் ரஜினி...?

விழாவின் போது கமல் மேடையில் அமர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பார்வையாளராக ரஜினி பங்கேற்பார் என்பதால், அவர் கீழே தான் அமர முடியும்.

திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி 1942 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் நாள் துவங்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் 75 வயதை எட்டும் முரசொலிக்கு திமுக பிரம்மாண்டமான பவள விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த விழா வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கலந்து கொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொள்கிறார். ஆனால், ரஜினிகாந்த் ஒரு பார்வையாளராக மட்டும் இவ்விழாவில் பங்கேற்கிறார் என்று திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதாக கடிதம் வாயிலாக கமல் உறுதிப்படுத்தியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால், விழாவின் போது கமல் மேடையில் அமர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேசமயம், பார்வையாளராக ரஜினி பங்கேற்பார் என கூறப்படுவதால், அவர் கீழே தான் அமர முடியும்.
ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த பரபரப்பான சூழ்நிலையில், இருவரும் இணைந்து திமுக முரசொலி பவள விழாவில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோரை சந்தித்து முரசொலி பவள விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிபிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close