கடந்த ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினி, இறுதி நாளான இன்று மீண்டும் ரசிகர்கள் முன்பு பேசினார். அவரது உரையின் முழு விவரம் இதோ:-
"ரசிகர்கள் இந்த அஞ்சு நாளும் ஒழுக்கத்தை கடைபிடிச்சீங்க. கட்டுக் கோப்போடு இருந்தீங்க. இப்படித்தான் இருக்கனும். ஒழுக்கம் இல்லைன்னா வாழ்க்கையில் யாரும் உருப்பட முடியாது. ரொம்ப சந்தோஷம் எனக்கு. இத அப்டியே மெயின்டெய்ன் பண்ணுங்க. இந்த ரசிகர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, கரெக்டாக நிர்வகித்த சுதாகருக்கும், இவர்களுக்கெல்லாம் நாயகனாக இருந்த, என் அருமை நண்பர், சிவராமகிருஷ்ணன் அவர்களுக்கும், பாபா அவர்களுக்கும், அனைத்து ராகவேந்திரா மண்டப ஸ்டாஃப்க்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்ட்... இங்க பக்கத்துல இருக்குற நெய்பர்ஸ்க்கெல்லாம் கொஞ்சம் பிராப்ளமா இருக்கும். அவங்களும் ஒத்துழைச்சுதுக்கு அவங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்ம ஜிம் பாய்ஸ்.. அவங்களுக்கு அன்ட் முக்கியமா போலீஸ் டிபார்ட்மென்ட்.. அவங்க கொடுத்து ஒத்துழைப்பு, நான் மறக்கவே முடியாது. அவங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்புறம் நம்ம மீடியா சகோதரர்கள்... என்ன வெரட்டு வெரட்டுனு வெரட்டி... (தனது டிரேட் மார்க் சிரிப்புடன்) ஏன்னா....அவுங்க பாஸுங்க அவங்கள விரட்டுறாங்க, இவங்க நம்மள விரட்டுறாங்க. நா சென்னையெல்லாம்..... சென்னையெல்லாம் சுத்தி இதாயிட்டன்...அவங்கள எப்படியாச்சும் இது பண்ணனும்-னு சொல்லிட்டு... பட்! என்ன பண்றது..!
ஒண்ணுமில்ல, நாலஞ்சு வார்த்த நா பேசினாலே ச்சர்ச்சையாவுது. வாத விவாதம் ஆவுது. இன்னும் மறுபடி பேசிக்கிட்டே இருந்தா இன்னும் மறுபடி சர்ச்சையாகும். அதுக்காக ஊடக நண்பர்கள், மீடியாவை நா அவாய்ட் செஞ்சேன். தயவு செஞ்சு தப்பா எடுத்துக்க வேண்டாம்.... நா சொல்றதெல்லாம் இங்க சொல்லிடுறன். அதுக்கப்புறம் ஒண்ணுமில்ல.. நேரம் வரும்போது சொல்லுறன்.
இந்த இதுல வந்து நாம பேசும்போது, ஃபர்ஸ்ட் டே வந்து பேசும் போது, ஒரு நாலு வார்த்த, அதுவந்து என்னுடைய அரசியலுக்கு நா சொன்னது. நா அரசியலுக்கு ஒருவேள வந்தா, நீங்க எப்டி இருக்கணும், அப்டினு சொன்னது வந்து, இவ்ளோ பெரிய சர்ச்சையா... வாத விவாதமா, ஐ மீன்... ஒரு ரூபத்தை எடுக்கும்-னு நா எதிர்பார்க்கல. வாத விவாதங்கள் இருக்கலாம், எதிர்ப்பு ஆதரவு எல்லாம் இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வளரவே முடியாது....(பலத்த கைத்தட்டல்). அதுவும் அரசியல்ல எதிர்ப்பு தான் மூல தனம்... (இன்னும் பலமாக கைத்தட்டல், விசில்...) வாத விவாதம் இருக்கலாம். ஆனால், சில சோஷியல் மீடியால, ட்வீட்டர்ல, ஃபேஸ்புக்ல சில பேரு வந்து எழுதும் போது, திட்டி எழுதும் போது, எனக்கு கஷ்டமா இல்ல..... ஆனா, 'நம்ம தமிழ் மக்கள் வந்து ஏன் இவ்வளவு கீழ்த்தரமான போயிட்டாங்க?' வார்த்தைகள் யூஸ் பண்றதுல அப்டிங்கிறதுலதான் ஒரு வருத்தம்.
முதல்ல வந்து ஒண்ணே ஒன்னு நா க்ளீயர் பண்ணனும். நா ரஜினிகாந்த், தமிழனா? அவரு தமிழரா? அப்படிங்கிற கேள்வி வருது. எனக்கு இப்போ 67 வயசாகுது. 23 ஆண்டு தான் நா கர்நாடகத்துல இருந்தன். மிச்சம் 44 ஆண்டுகள் தமிழ் மக்கள்..... (சிரிப்புடன்) உங்க கூட, உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்துல இருந்து ஒரு மராட்டியனாகவோ, ஒரு கன்னடகாரனாகவோ இங்க வந்திருந்தா கூட, நீங்க என்ன ஆதரிச்சு அன்பு கொடுத்து, பேரும், புகழும், பணமும் எல்லாம் அள்ளிக் கொடுத்து, என்ன வந்து நீங்க தமிழனா ஆக்கிட்டீங்க. சோ... நா பச்சத் தமிழன்... (அரங்கம் அதிரும் கைத்தட்டல்). எங்க மூதாதையர்கள், எங்க அப்பா எல்லாம் வந்து நாச்சிக்குப்பம் கிருஷ்ணகிரில பொறந்தது பத்தி நா ஆல்ரெடி சொல்லியிருக்கேன்.
நீங்க வந்து........ என்ன வந்து.., எங்கயாவது போ.. அப்டினு சொன்னா, என்னை தூக்கிப் போட்டா, நா இமயமலையில தான் விழுவேனே தவிர, வேற எந்த மாநிலத்திலையும் போய் விழ மாட்டேன். ஏன்னா.. தமிழ் மக்கள் நல்ல மக்கள்.. நல்ல உள்ளம் கொண்ட மக்கள். இருந்தா இங்க இருக்கணும். இல்லனா சித்தர்கள் இருக்குற இமாலயாவுல இருக்கணும். அன்ட்.... என்ன வாழ வைக்கும் தெய்வங்க நீங்க, என்ன வாழ வச்சீங்க, நா நல்லாயிருக்கன். என்ன வாழ வச்ச தெய்வங்கள் நல்லா இருக்கக் கூடாதா? என்ன மாதிரி அவங்களும் நல்லா இருக்க கூடாதா? அப்டினு நனைக்குறதுல என்ன தப்பு இருக்குனு எனக்கு தெரியல.
சரி! 'அதுக்கு நீயென்ன., மத்தவங்க இருக்காங்க. நீயென்ன கரெக்ட் பண்றனு சொல்றது?' அப்டினு சொன்னா... யெஸ்.., இருக்காங்க. அருமை 'தளபதி' மு.க.ஸ்டாலின் அவர்கள் என் நெருங்கிய நண்பர், நல்ல திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்லுவார்.. 'அவரு மட்டும் ஃப்ரீ ஹாண்ட் கொடுத்தா, ரொம்ப நல்லா செயல்படுவார். ஆனா, ஃப்ரீ ஹாண்ட் கொடுக்க மாட்டாங்க அப்டினு'.
அன்புமணி ராம்தாஸ்... நல்லா படிச்சவர். நல்லா விஷயம் தெரிஞ்சவர். மாடர்னா திங்க் பண்ண கூடியவர். உலகமெல்லாம் சுற்றியிருக்குறாங்க. நல்ல கருத்துக்கள், நல்ல பிளான்ஸ்லாம் வச்சிருக்காங்க. திருமாவளவன்... தலித்திற்கு ஆதரவா, நல்லா குரல் கொடுத்து உழைச்சிட்டு இருக்காங்க. சீமான்.... போராளி. அவருடைய சில கருத்துக்கள கேட்டு நா பிரமிச்சுப் போயிருக்கன். அந்த மாறி இருக்காங்க. தேசிய கட்சிகள் எல்லாம் இருக்காங்க. பட்! சிஸ்டம் கெட்டுப் போயிருக்கே.. (அதிரும் கைத்தட்டல்..) சிஸ்டம் கெட்டுப் போயிருக்கே. ஜனநாயகமே கெட்டுப் போயிருக்கே. அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களின் மன ஓட்டமே சேஞ் ஆகியிருக்கே.
சோ சிஸ்டமே சேஞ் பண்ணனும். ஜனங்களோட மன ஓட்டத்தை சேஞ் பண்ணனும். ஒரு மாற்றத்தை உண்டாக்கணும். அப்போதான் நாடு உருப்படும். அத எல்லாரும் சேர்ந்து பண்ண வேண்டியிருக்கு. இன்னொன்னு...இந்த வலைத்தளங்கள்ல பேசுறத கேட்டெல்லாம் ரசிகர்கள் அஃபெக்ட் ஆக வேண்டாம். ஏன்னா, எதிர்ப்பிருந்தா தான் நாம வளர முடியும்.
ஒரு செடி வளர்க்கணும்-னா முதல்ல குழி தோண்டனும். குழி தோண்டி உரம், மண்ணு வெத எல்லாத்தையும் போட்டுட்டு மண்ண போட்டு மூடிடுவோம். மூடிட்டு வுட மாட்டோம். நல்லா அழுத்தி அழுத்தி அமுக்குறோம். ஏன்னா, அது வளரணும்ங்குறதுக்காக. சோ.. இந்த அவதூறுகள், திட்டுகள், நிந்தனைகள் இதெல்லாம் வந்து, உரம் மாதிரி. மண்ணு மாதிரி. அதை வந்து நெறைய போடதான், செடி இன்னும் வெளியே நல்லா வரும். அவங்க நம்பளுக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்காங்க அப்டிங்கிறது தெரியமாட்டேங்குது சில பேருக்கு.
ஒருவாட்டி புத்தர் வந்துட்டு, அப்டியே ஒரு பயணம் போய்க்கிட்டு இருந்தாங்க, அவங்க சிஷ்யங்க கூட. அப்போவந்து.. ஒரு ஏழெட்டு பேரு வந்து வழிமறிச்சி, கன்னாபின்னானு திட்டுறாங்க. அப்டி திட்டு திட்டுனு திட்டுறாங்க. புத்தர் வந்து சைலண்டா நிக்குறார். ஒன்னும் பேசல.. சிரிச்சிட்டே இருக்கார். அவங்க சீடர்கள் பேசக் கூடாது. ஏன்னா, குருவே சும்மா இருக்காரே... அவங்க திட்டி கொட்டிட்டு போன பிறகு, அவங்க கேட்டாங்க, 'என்ன குரு.. அவ்ளோ திட்டுறாங்க.. சைலண்டா ஒன்னும் பேசாம நிக்கிறீங்கள?'னு கேட்ட போது, 'அவங்க திட்டிட்டு கொட்டிட்டு போய்ட்டாங்க, அத நா எடுத்துக்கலையே... அத அவங்களே எடுத்துட்டு போய்ட்டாங்க...(தனது பலத்த சிரிப்புடன் தொடர்கிறார்...)
சோ... வந்து, பழைய காலத்துல எப்டின்னா, ராஜாக்கள் கிட்ட சேனை பலம் படைபலம் இருக்கும். லட்சக்கணக்குல இருக்காது. ஒரு பத்தாயிரம், அஞ்சாயிரம் என அவங்களால எவ்ளோ மெயின்டேன் பண்ண முடியுமோ, அவ்ளோ தான் இருக்கும். ஆனா, போருன்னு வரும் போது, எல்லா ஆண் மக்களும் சேர்ந்து வந்து போரிடுவாங்க. அதுவரைக்கும் அந்த ஆண் மக்கள், பிரஜைகள் எல்லாமே அவங்கவங்க வேலைங்க, அவங்கவங்க கடமைகளை செஞ்சிக்கிட்டே இருப்பாங்க. அப்போ உழைக்குறதுனால உடம்பு அப்டி இருக்கும். வீர விளையாட்டுகள வச்சதே வந்து வீரர்களை யோகர்களாக ஆக்குறதுக்குத்தான்.
இந்த ஜல்லிக்கட்டு, கம்புச் சண்ட, குஸ்தி, கபடி எல்லாம் வந்து அவங்க பலமா இருக்கணும் என்பதற்காக தான். சோ.. அவங்க கடமை செஞ்சுக்கிட்டே இருப்பாங்க, போர் வரும் போது எல்லாரும் இறங்கி, அவங்க சுய மண்ணுக்காக, மானத்துக்காக எல்லாரும் போராடுவாங்க.
அந்த மாதிரி எனக்கும் கடமைகள் இருக்கு. தொழில் இருக்கு, வேலை இருக்கு. உங்களுக்கும் கடமைகள் இருக்கு. தொழில் இருக்கு, வேலை இருக்கு. உங்க ஊருக்கு போங்க, உங்க கடமைகளை செய்யுங்க. உங்க தொழில பார்த்துக்கங்க..போர் வரும்போது பார்த்துப்போம். ஆண்டவன் இருக்கான். நன்றி!"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.